நீர்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு; ஆற்றில் வினாடிக்கு 7,700 கன அடி உபரிநீர் வெளியேற்றம்


நீர்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு; ஆற்றில் வினாடிக்கு 7,700 கன அடி உபரிநீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 3 Dec 2021 2:47 AM IST (Updated: 3 Dec 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரத்து 700 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரத்து 700 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.  
நீர்வரத்து அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை உள்ளது. 
இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளது. 
வினாடிக்கு 7,700 கன அடி
நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 816 கன அடியாக இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,800 கன அடியும் உபரி நீராக திறக்கப்பட்டது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 532 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரத்து 700 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,800 கன அடியும் என  மொத்தம் அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கன அடி உபரிநீர்  திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக நீடித்தது. 
எச்சரிக்கை
பவானி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் உபரிநீராக அதிகரித்து திறக்கப்பட்டு உள்ளது. 
இதனால் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்குமாறு பொதுப்பணி துறை மற்றும் வருவாய் துறை சார்பாக தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Next Story