கப்பல் வேலைக்கு ஆசைப்பட்டு ரூ.48 லட்சத்தை இழந்த இளைஞர்கள்


கப்பல் வேலைக்கு ஆசைப்பட்டு ரூ.48 லட்சத்தை இழந்த இளைஞர்கள்
x
தினத்தந்தி 3 Dec 2021 5:32 AM IST (Updated: 3 Dec 2021 5:32 AM IST)
t-max-icont-min-icon

முகநூல் விளம்பரத்தை பார்த்து, கப்பல் வேலைக்கு ஆசைப்பட்டு அப்பாவி இளைஞர்கள் 43 பேர், ரூ.48 லட்சத்தை இழந்துவிட்டதாக போலீசில் பரபரப்பு புகார் மனுவை கொடுத்துள்ளனர்.

சென்னை,

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் வினோத் (வயது 35). தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர் ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

முகநூல் விளம்பரம் (பேஸ்புக்) ஒன்றை பார்த்தேன். அதில் சுற்றுலா கப்பலில் வேலை செய்ய ஆட்கள் தேவைப்படுகிறது என்றும், கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்றும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. நுங்கம்பாக்கத்தில் செயல்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று அந்த விளம்பரத்தை வெளியிட்டு இருந்தது. அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ரூ.1 லட்சம் கொடுத்தால், அந்த வேலை உறுதி என்றும் தெரிவித்தார்கள். உடனே அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் செலுத்திவிட்டு, குறிப்பிட்ட கப்பல் வேலைக்கு விண்ணப்பித்தேன். நேர்முக தேர்வு நடத்தினார்கள். அதிலும் கலந்து கொண்டேன்.

மீட்டு தரவேண்டும்

ஆனால் அந்த கப்பல் வேலை கிடைக்கவில்லை. நான் கொடுத்த பணத்தையும் திருப்பித்தரவில்லை. இதுபோல 43 பேர் இந்த வேலைக்கு விண்ணப்பித்து ரூ.48 லட்சத்தை இழந்து விட்டோம். இது தொடர்பாக அந்த வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, நாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story