கட்டிலில் தூங்கியபோது தவறி விழுந்தார்: வீட்டுக்குள் புகுந்த மழைநீரில் மூழ்கி தொழிலாளி சாவு


கட்டிலில் தூங்கியபோது தவறி விழுந்தார்: வீட்டுக்குள் புகுந்த மழைநீரில் மூழ்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 3 Dec 2021 5:38 AM IST (Updated: 3 Dec 2021 5:38 AM IST)
t-max-icont-min-icon

கட்டிலில் படுத்து தூங்கிய தொழிலாளி, வீட்டுக்குள் புகுந்திருந்த மழைநீர் வெள்ளத்தில் தவறி விழுந்ததில் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவெற்றியூர்,

சென்னையை அடுத்த மணலி சின்னசேக்காடு தேவராஜன் தெருவில் ஓட்டு வீட்டில் வசித்து வந்தவர் ஜெயகோபி (வயது 45). சி.பி.சி.எல். தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி செந்தாமரை.கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக இவரது வீட்டை சுற்றி மழைநீர் தேங்கி உள்ளதோடு, இவரது வீட்டுக்குள்ளும் மழைநீர் வெள்ளம் புகுந்தது. இதனால் ஜெயகோபி, தனது மனைவியை பக்கத்து தெருவில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவர் மட்டும் வீட்டில் தங்கி இருந்தார்.

மழைநீரில் தவறி விழுந்து சாவு

நேற்று முன்தினம் இரவு ஜெயகோபி, வீட்டுக்குள் தேங்கி நின்ற மழைநீர் வெள்ளத்தின் நடுவில் கட்டிலில் படுத்து தூங்கினார். அப்போது அவர், தூக்க கலக்கத்தில் கட்டிலில் இருந்து தவறி, மழைநீரில் விழுந்து விட்டார். இதில் நீரில் மூழ்கிய அவர், மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

நேற்று காலை தனது வீட்டுக்கு வந்த செந்தாமரை, தனது கணவர் ஜெயகோபி மழைநீரில் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மணலி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் தலைமையிலான போலீசார், ஜெயகோபி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story