ஈரோட்டில் டீக்கடையில் மறைந்த நடிகை சில்க் சுமிதா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்
ஈரோட்டில் டீக்கடையில் மறைந்த நடிகை சில்க் சுமிதா பிறந்தநாளை கேக் வெட்டி ரசிகர் கொண்டாடினாா்.
ஈரோடு
ஈரோடு சேட்காலனியை சேர்ந்தவர் குமார். அங்கு டீக்கடை நடத்தி வருகிறார். அவர் மறைந்த நடிகை சில்க் சுமிதாவின் தீவிர ரசிகர். 90-ம் ஆண்டுகளில் திரைப்படங்களில் கவர்ச்சி நாயகியாக, தற்போதைய உரையாடல் மொழியில் சொல்வது என்றால் 70 மற்றும் 80 கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக, கவர்ச்சி ராணியாக திரை உலகில் வலம் வந்தவர் சில்க் சுமிதா.
அவருக்கு ரசிகர் பட்டாளம் உண்டு. அப்படிப்பட்ட ரசிகர்களில் பலர் இன்றும் அவரைப்பற்றி பேசினால் சிலாகித்துப்போவது உண்டு. அப்படிப்பட்ட தீவிர சில்க் சுமிதா ரசிகர்களில் ஒருவர் குமார். இவர், சில்க் சுமிதா மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவர் நடத்தி வரும் டீக்கடையில் சில்க் சுமிதாவின் விதவிதமான படங்களை ஒட்டி வைத்து இருக்கிறார். அதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் சில்க் சுமிதாவின் பிறந்தநாள் கொண்டாடுவதுடன், அவர் மறைந்த நாளில் அஞ்சலியும் செலுத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மறைந்த நடிகை சில்க் சுமிதாவின் பிறந்தநாளாகும். இந்த நாளை நினைவில் வைத்து டீக்கடைக்காரர் குமார் பிறந்தநாள் கொண்டாடினார். சில்க் சுமிதாவின் உருவப்படத்தை மலர்களால் அலங்காரம் செய்து அவரது உருவப்படத்துக்கு முன்பு கேக் வெட்டி கொண்டாடியதுடன் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கினார். அவருக்கு 61-வது வயது என்பதை நினைவு கூர்ந்து 61 நபர்களுக்கு 2022-ம் ஆண்டு காலண்டர்களை பரிசாக கொடுத்து மகிழ்ந்தார் ரசிகர் குமார்.
இவ்வாறு அவர் மறைந்த நடிகை சில்க் சுமிதா பிறந்தநாள் கொண்டாடியது இணையதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story