கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்தவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்த கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் உள்பட 10 பேரின் வீடுகளுக்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் தடுப்பூசி செலுத்திய பின்னர் அவர்களின் வீடுகளுக்கு மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
சிக்கமகளூரு: கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்த கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் உள்பட 10 பேரின் வீடுகளுக்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் தடுப்பூசி செலுத்திய பின்னர் அவர்களின் வீடுகளுக்கு மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
தடுப்பூசி செலுத்த மறுப்பு
கர்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் சில இடங்களில் பயத்தில் தடுப்பூசி செலுத்த மக்கள் முன்வருவதில்லை. மேலும் தடுப்பூசி செலுத்த மருத்துவ ஊழியர்கள் வருவதை அறிந்து சிலர் வீடு, தோட்டங்களில் பதுங்குவதும், சாமி அருள் வந்தது போல் சாமியாடும் சம்பவங்களும் நடக்கிறது.
இந்த நிலையில் தாவணகெரே தாலுகாவில் சாஸ்வேஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராம பஞ்சாயத்து துணைத்தலைவராக இருப்பவர் தர்மப்பா. இவர், அவரது குடும்பத்தினர் மற்றும் 10 குடும்பத்தை சேர்ந்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போட கிராமத்திற்கு வந்த மருத்துவ ஊழியர்கள் கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் உள்பட 10 குடும்பத்தினரை தடுப்பூசி செலுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தி வந்தனர். ஆனால் அவர்கள், தொடர்ந்து தடுப்பூசி செலுத்த மறுத்து வந்தனர்.
10 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு
இதுபற்றி மருத்துவ ஊழியர்கள், தாவணகெரே தாலுகா துணை தாசில்தார் லிங்கேகவுடா என்பவரது கவனத்திற்கு கொண்டுச் சென்றனர். அதன்படி நேற்று மதியம் துணை தாசில்தார் லிங்கேகவுடா தலைமையில் மருத்துவ ஊழியர்கள் சாஸ்வேஹள்ளி கிராமத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள், கிராம பஞ்சாயத்து துணை தலைவர் தர்மப்பா உள்பட 10 குடும்பத்தை சேர்ந்தவர்களையும் தடுப்பூசி செலுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தினர். ஆனால் அப்போதும் அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள மறுத்து அடம்பிடித்தனர்.
இதையடுத்து துணை தாசில்தார் லிங்கேகவுடா தடுப்பூசி செலுத்தாத குடும்பத்தினரின் வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டிக்க முடிவு செய்தார். அதன்படி மின்வாரிய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தாத கிராம பஞ்சாயத்து துணை தலைவர் உள்பட 10 பேரின் வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டித்தனர்.
மீண்டும் இணைப்பு கொடுக்கப்பட்டது
இதையறிந்த தர்மப்பா, 10 வீடுகளை சேர்ந்தவர்கள் துணை தாசில்தாரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர், தடுப்பூசி செலுத்தினால் மீண்டும் மின்இணைப்பு கொடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து மருத்துவ ஊழியர்கள், தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து சமாதானப்படுத்தி அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதைதொடர்ந்து மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story