மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்பு


மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 4 Dec 2021 2:09 PM IST (Updated: 4 Dec 2021 2:09 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்திற்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்று ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 32). தனியார் பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருத்தணி தாலுக்கா எஸ்.அக்ரஹாரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த வாணிஸ்ரீ (28) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அத்திமாஞ்சேரி பேட்டையில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 30-ந்தேதி வாணிஸ்ரீ மாயமானார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை அத்திமாஞ்சேரி பேட்டை கிராமம் அருகே உள்ள கிணற்றில் ஒரு பெண் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றினார்.

போலீஸ் விசாரணையில் அவர் மாயமான வாணிஸ்ரீ என்பது தெரியவந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் வாணிஸ்ரீயின் சாவிற்கு வரதட்சணை கொடுமை தான் காரணம் என்று அவரது உறவினர்கள் திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யாவிடம் புகார் தெரிவித்தனர்.

இதற்கு காரணமான அவரது கணவர் அருண்குமார், அவரது தாய் சாந்தி மற்றும் அவர்களுடன் வசிக்கும் திருநங்கை ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story