அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதிக்கு 19 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டன
அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதிக்கு 19 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டன.
அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதிக்கு 19 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டன.
போக்குவரத்து நிறுத்தம்
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. கடந்த 15-ந் தேதி பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பர்கூர் மலைப்பாதையில் செட்டிநொடி என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதுடன், பாதி அளவுக்கு ரோடு சரிந்தது.
இதன்காரணமாக பர்கூர் மலைப்பாதையில் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பர்கூர் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவு சீரமைக்கப்பட்டது. எனினும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்படவில்லை. அதே நேரத்தில் மோட்டார்சைக்கிள் மற்றும் கார்கள் சென்று வந்தன.
மலைவாழ் மக்கள் கோரிக்கை
பர்கூர் மலைப்பாதையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மலைவாழ் மக்கள் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வேலைக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர்.
பஸ்கள் இயக்கப்படாததால் வேலைக்கு செல்ல முடியாமல் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், எனவே மலைப்பாதையை விரைந்து சீர் செய்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை பஸ்கள் செல்லக்கூடிய அளவுக்கு சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று அரசு பஸ் சோதனை ஓட்டம் நேற்று காலை நடைபெற்றது.
பஸ்கள் இயக்கம்
அரசு பஸ்சின் சோதனை ஓட்டத்தை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட இடம் வழியாக அரசு பஸ் எந்தவித இடையூறுமின்றி சென்றது. இதையடுத்து பஸ்சில் பயணிகள் ஏறி செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
19 நாட்களுக்கு பிறகு அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதி கிராமங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்துக்கு பஸ்கள் இயக்கப்பட்டதால் மலைவாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மலைப்பாதை முழுவதும் சீ்ரமைக்கப்பட்ட பின்னர் தான் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே கனரக வாகனங்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story