சென்னிமலை முருகன் கோவிலில் சாய்ந்த நிலையில் இருந்த கொடி மரம் அகற்றம்
சென்னிமலை முருகன் கோவிலில் சாய்ந்த நிலையில் இருந்த கொடி மரம் அகற்றப்பட்டது.
சென்னிமலை முருகன் கோவிலில் சாய்ந்த நிலையில் இருந்த கொடி மரம் அகற்றப்பட்டது.
சென்னிமலை முருகன் கோவில்
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர நாட்களில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
இதில் முதல் நிகழ்ச்சியாக கோவிலின் முன்பு உள்ள கொடிமரத்தில் சேவல் கொடியேற்றிய பின்பே மற்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த கொடிமரம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்டதாக இருந்ததால் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவுக்காக புதிய கொடி மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
37 அடி உயரம்
இதற்காக கேரளா மாநிலத்தில் இருந்து வேங்கை மரம் கொண்டு வந்து கோபிசெட்டிபாளையத்தில் தயார் செய்யப்பட்டது. 37 அடி உயரத்தில் தயார் செய்யப்பட்ட இந்த கொடிமரம் கடந்த 12-6-2014 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் 7-7-2014 அன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடிமரம் பழுதடைந்த நிலையில் சாய்வாக இருந்ததை சென்னிமலை கோவில் செயல் அலுவலர் மு.ரமணி காந்தன் பார்த்தார்.
பழுதடைந்து சாய்வாக...
இதுபற்றி அறிந்ததும் சேலம் மண்டல ஸ்தபதி கவுதமன் வந்து கொடிமரத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொடிமரம் பழுதடைந்து சாய்வாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கொடிமரத்தில் உள்ள செப்பு தகடுகளை அகற்றி ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் கொடிமரம் சாயாமல் இருப்பதற்காக சாரம் அமைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி கோவில் இணை ஆணையர் மங்கையர்கரசி மூலம் சென்னையில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையரை நேரில் சந்தித்து கொடிமரத்தை முழுமையாக அகற்றுவதற்கான அனுமதி பெறப்பட்டது.
அகற்றம்
இதைத்தொடர்ந்து ஈரோடு துணை ஆணையர் எம்.அன்னக்கொடி, துறையின் நகை மற்றும் ரத்தினங்கள் மதிப்பீட்டு வல்லுநர் ஆகியோர் மேற்பார்வையில் கொடி மரத்தில் உள்ள செப்பு தகடுகளை அகற்றி பாலாலயம் செய்யப்பட்டது. முன்னதாக கோவில் அர்ச்சகர்கள் கொடிமரத்துக்கு பூஜைகள் செய்தனர்.
இதையடுத்து கொடிமரம் அகற்றும் பணி தொடங்கப்பட்டது. அப்போது கொடிமரத்தின் உள் பகுதியில் 3 இடங்களில் மிகவும் உளுத்த நிலையில் இருப்பதை கண்டு கோவில் அலுவலர்களும், பக்தர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பே கொடிமரத்தை அகற்றியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விரைவில் புதிய கொடிமரம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வருகிற ஜனவரி மாதம் சென்னிமலையில் தைப்பூசம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story