ஈரோடு மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை; குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது
ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. 2 வீடுகள் இடிந்து விழுந்தன.
ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. 2 வீடுகள் இடிந்து விழுந்தன.
ஈரோடு
ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் அடிப்பதும், மாலை வேளையில் மழை பெய்வதுமாக காணப்பட்டது. நேற்று அதிகாலை மழை சாரலாக பொழிந்தது. அதைத்தொடர்ந்து பலத்த மழையாக கொட்ட தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதி முழுவதும் கன மழை பெய்தது. காலை 10 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு பகல் 11 மணி வரை தூறலாக காணப்பட்டது.
வேலைக்கு செல்பவர்கள் மழையில் நனைந்தபடி சென்றார்கள். பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கினார்கள். ஈரோடு பஸ் நிலையம், காளைமாட்டு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பெருந்துறைரோடு, ஈ.வி.என்.ரோடு, கருங்கல்பாளையம் காவிரிரோடு, எல்லப்பாளையம்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
வீடுகள் இடிந்தன
ஈரோடு சூளை பாரதிநகரில் நல்லு என்பவரின் மனைவி அந்தோணியம்மாளின் (வயது 68) ஓட்டு வீடு மழையால் இடிந்து விழுந்தது. இதேபோல் பக்கத்துக்கு வீட்டின் சுவரும் இடிந்து கீழே விழுந்தது. இந்த வீடுகளில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறை அதிகாரிகளும், வீரப்பன்சத்திரம் போலீசாரும் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
எல்லப்பாளையம் பகுதியில் வயல்வெளியில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் நெல் பயிரிடப்பட்டு இருந்த வயலில் மழைநீர் குளம்போல் தேங்கியது. ஈரோடு சோழா நகரில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேவரமுடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள கடைக்கு தேங்கிய மழைநீரில் நடந்து சென்று பொருட்களை வாங்கி வந்தார்கள்.
மழை வெள்ளம்
கன மழை காரணமாக பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம், சுண்ணாம்பு ஓடைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் சிரமப்பட்டார்கள்.
அங்கு தேங்கி நின்ற தண்ணீரை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டார்கள்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பலத்த மழை பெய்ய ெதாடங்கியது. இந்த மழை நேற்று அதிகாலை 4 மணி வரை நீடித்தது.
மழை காரணமாக ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
மேலும் நெரிஞ்சிப்பேட்டையில் உள்ள மேட்டூர் ரோடு மற்றும் டைவர்ஷன் ரோடு பகுதிகளில் உள்ள 10 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்த நீரை பாத்திரங்கள் மூலம் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதேபோல் அந்த பகுதியில் உள்ள மீன் பண்ணைக்குள்ளும் மழைநீர் புகுந்தது. அதுமட்டுமின்றி அந்த பகுதியில் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, சோளம் போன்ற பயிர்களையும் வெள்ளம் சூழ்ந்தது.
நெரிஞ்சிப்பேட்டை அருகே உள்ள பாலமலை பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக அங்கிருந்து மழைநீர் பெருக்கெடுத்து நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் ஓடியது.
இதேபோல் சிவகிரி, கொடுமுடி, ஊஞ்சலூர், சென்னிமலை, டி.என்.பாளையம், மொடக்குறிச்சி பகுதிகளில் கனமழை பெய்தது.
Related Tags :
Next Story