தினத்தந்தி புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி
நோய் பரவும் அபாயம்
அம்மாபேட்டையில் இருந்து பவானி செல்லும் மெயின் ரோட்டில் பேரூராட்சி எல்லை தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் அருகில் உள்ள ஊராட்சிகளின் குப்பைகளை கொண்டு வந்து கொட்டிவிட்டு சிலர் சென்று விடுகின்றனர். இந்த குப்பைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கலந்துள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர். மேலும் அந்த பகுதியில் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிங்கம்பேட்டை கேட்.
குண்டும், குழியுமான ரோடு
அம்மாபேட்டையில் இன்டேன் கியாஸ் கம்பெனி ரோடு உள்ளது. இந்த ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த ரோட்டில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கிறார்கள். எனவே குண்டும், குழியுமாக ரோட்டை சீா் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சு.அத்தாஉல்லா, அம்மாபேட்டை.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
கோபியை அடுத்த மொடச்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட வேட்டைக்காரன் கோவில் பகுதியில் சாக்கடை வசதி இல்லை. இதனால் ரோட்டோரம் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் அந்த பகுதியில் ஏராளமானோர் குப்பை கழிவுகளை கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். அதுமட்டுமின்றி கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி நோய்தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே கழிவுநீரை அகற்றுவதுடன், குவிந்து கிடக்கும் குப்பைகளையும் அகற்ற வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
குப்பைகள் அள்ளப்படுமா?
ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டிசெல்லும் சாக்கடை கால்வாயில் அடிக்கடி குப்பைகள் சேர்ந்து சாக்கடை கழிவுநீர் செல்ல முடியாதபடி தேங்கி நிற்கிறது. மேலும் மாநகராட்சி பணியாளர்கள் குப்பைகளை அள்ளி ரோட்டில் போட்டு வைத்து பின்னர் 2 அல்லது 3 நாட்கள் கழிந்து அள்ளுகின்றனர். இதனால் அந்த பகுதியில் அதிக அளவில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் போது மூக்கை பிடித்தபடி செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி ரோட்டில் கொட்டி தண்ணீர் வடிந்தவுடன் குப்பைகளை அள்ளிச்செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், முனிசிபல் காலனி.
சாலை-தெருவிளக்கு வசதி
சென்னிமலை- ஈரோடு ரோட்டில் அசோகபுரம் பகுதியில் சென்குமார் நெசவாளர் கூட்டுறவு சங்க நகரில் கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு சாலை வசதியும் இல்லை. தெருவிளக்கு வசதியும் இல்லை. இதனால் இங்குள்ளவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் சாலை வசதியும், தெருவிளக்கு வசதியும் ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சென்குமார் கூட்டுறவு சங்க நகர்.
வடிகால் அமைக்க வேண்டும்
பி.மேட்டுப்பாளையம் வெல்லுங்காட்டு பிரிவு வீதியில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இந்த மழைநீருடன், சாக்கடை கழிவுநீரும் கலந்து உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த பகுதியில் தேங்கி உள்ள சாக்கடை கழிவுநீர் மற்றும் மழைநீரை வெளியேற்றுவதுடன், அங்கு சாக்கடை வடிகால் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பி.மேட்டுப்பாளையம்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
தளவாய்ப்பேட்டை மெயின் ரோட்டில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. இதனால் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தளவாய்ப்பேட்டை.
Related Tags :
Next Story






