ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் குண்டம் விழா; பூசாரிகள் மட்டும் தீ மிதித்தனர்
ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டும் தீ மிதித்தனர்.
ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டும் தீ மிதித்தனர்.
குண்டம் விழா
ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 25-ந் தேதி கோவிலின் முன்பு கம்பங்கள் நடப்பட்டன.
தினமும் பக்தர்கள் கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் சின்ன மாரியம்மன் கோவில் வளாகத்தில் குண்டம் தயார் செய்வதற்கு தேவையான கரும்புகள் (விறகு) அடுக்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீ பற்ற வைக்கப்பட்டது. நேற்று காலையில் குண்டம் தயார் செய்யப்பட்டது.
தேரோட்டம்
கோவிலின் பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் குண்டம் இறங்கினார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம் பூசாரிகள் குண்டம் இறங்குவதை காணுவதற்கு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் சுற்றிலும் நின்று கொண்டு குண்டம் விழாவை பார்த்தனர். விழாவையொட்டி சின்ன மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதன்பிறகு தேரோட்டம் நடந்தது. அம்மனின் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டது. தொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) இரவில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைக்க உள்ளனர். தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 8-ந் தேதி இரவு 7 மணிக்கு கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 9-ந் தேதி இரவு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story