மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் பார்வைநேரம் நீட்டிப்பு
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் பார்வைநேரம் 5 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
புராதன சின்னங்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது. இந்த புராதன சின்னங்களை கண்டுகளிக்க தொல்லியல் துறை உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடம் ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளிடம் ரூ.700-ம் பார்வையாளர் கட்டணமாக வசூலிக்கிறது. இந்தநிலையில் கொரோனா தொற்று தடுப்பு கருதி கடந்த ஆண்டு 9 மாதங்கள், இந்த ஆண்டு 2 மாதங்கள் என மாமல்லபுரம் புராதன சின்னங்கள் மூடப்பட்டன.
இந்தநிலையில் தமிழக அரசு ஊரடங்கு தளர்வை அறிவித்ததை தொடர்ந்து கடந்த 5 மாதங்களாக மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளுடன் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
பார்வையாளர் நேரம் நீட்டிப்பு
தற்போது பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கூடுதல் நேரம் திறந்து பார்வையாளர் நேரத்தை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மத்திய தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை குறித்து பரிசீலித்த தொல்லியல்துறை நிர்வாகம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புராதன சின்னங்களை பார்க்க அனுமதி அளித்துள்ளது.
நேற்று முதல் இந்த கூடுதல் நேரம் திறப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. பார்வை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு சுற்றுலா பயணிகள் வரவற்பு தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story