வாடகை கார்களை அடமானம் வைத்து பணம் மோசடி; டிராவல்ஸ் நிறுவன அதிபர் கைது
வாடகை கார்களை அடமானம் வைத்து லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டார்.
லட்சக்கணக்கில் மோசடி
சென்னை நுங்கம்பாக்கத்தில் விவிலியா டிரான்ஸ்போர்ட்ஸ் என்ற டிராவல்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் வாயிலாக நிறையபேர் தங்களது கார்களை வாடகைக்கு விட்டு இருந்தனர். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அருண் என்ற அருண்குமார் மீது நிறைய புகார்கள் கூறப்பட்டன. இவர் கார்களுக்கான வாடகை தொகையை அவற்றின் உரிமையாளர்களுக்கு ஒழுங்காக கொடுக்காமல் முறைகேடு செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் இவர் தனது நிறுவனத்திடம் வாடகைக்கு வந்த கார்களை அவற்றின் உரிமையாளர்களுக்கு தெரியாமல் அடமானம் வைத்து லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
டிராவல்ஸ் நிறுவன அதிபர் கைது
இது தொடர்பாக சென்னை போரூரைச்சேர்ந்த அப்பாவு என்பவர் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அருண்குமார், வாடகை கார்களை அடமானம் வைத்து பணம் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.
கார்களின் ஆர்.சி.புத்தகத்தை ஜெராக்ஸ் நகல் எடுத்து அதன் மூலம், ஒரு காரை ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அடமானம் வைத்து மோசடி லீலையில் ஈடுபட்டுள்ளார். அடமானம் வைக்கப்பட்ட 12 சொகுசு கார்கள் மீட்கப்பட்டன. அருண்குமார் கைது செய்யப்பட்டார். அடமானம் வைக்கப்பட்ட மேலும் 9 கார்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story