ரூ.30 லட்சம் சொத்து அபகரிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி


ரூ.30 லட்சம் சொத்து அபகரிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
x
தினத்தந்தி 6 Dec 2021 8:51 PM GMT (Updated: 2021-12-07T02:21:08+05:30)

ரூ.30 லட்சம் சொத்தை அபகரிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு
ரூ.30 லட்சம் சொத்தை அபகரிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயற்சி
தொழிலாளி
பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையம் லட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 55). சலவை தொழிலாளி. இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுடைய மகன் அன்பரசு. சக்திவேலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்பிலான வீட்டுமனை இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு தனக்கு சொந்தமான வீட்டுமனையில் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற, ஈரோட்டை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவரை தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, ஜவுளிக்கடை உரிமையாளர் தன்னுடைய பெயருக்கு இடத்தை கிரையம் செய்து கொடுத்தால் கடன் தருவதாக கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து சக்திவேல் ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் கடனாக பெற்றுக்கொண்டு தனது இடத்தை கிரையம் செய்து கொடுத்துள்ளார். தற்போது கடன் தொகையை பெற்றுக்கொண்டு, நிலத்தையும் திருப்பி கொடுக்காமல் ஜவுளிக்கடை உரிமையாளர் மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகின்றது.
தீக்குளிக்க முயற்சி
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இதுதொடர்பாக சக்திவேல் மனு கொடுக்க தனது மனைவி தமிழரசி, மகன் அன்பரசு ஆகியோருடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் சக்திவேல் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண் எண்ணெய் பாட்டிலை எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தி சக்திவேலை மீட்டனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் நடத்திய சோதனையின் போது, தீக்குளிக்க வந்ததாக மேலும் 2 பேரிடம் மண் எண்ணெய் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story