சத்தி, புஞ்சைபுளியம்பட்டியில் பலத்த மழை: 2 வீடுகள் இடிந்து விழுந்தன- தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு


சத்தி, புஞ்சைபுளியம்பட்டியில் பலத்த மழை: 2 வீடுகள் இடிந்து விழுந்தன- தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2021 8:51 PM GMT (Updated: 6 Dec 2021 8:51 PM GMT)

சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டியில் பெய்த பலத்த மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு
சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டியில் பெய்த பலத்த மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த மழை
சத்தியமங்கலத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் லேசாக மழை தூற தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது. அதிகாலை 5 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. அதன்பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதேபோல் பண்ணாரி, ராஜன் நகர், சிக்கரசம்பாளையம், மாரனூர், தொட்டம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டியது.
தரைப்பாலம் மூழ்கியது
இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சத்தியமங்கலத்தில் இருந்து ஊட்டி செல்லும் வழியில் மாரனூர் பிரிவு அருகே உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது. அந்த வழியாக இருசக்கர வாகனம், கார், பஸ், லாரி, வேன் என எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுமார் ½ மணி நேரத்துக்கு பிறகு மழை வெள்ளம் வடிந்தது. அதன்பின்னரே வாகனங்கள் மெதுவாக கடந்து சென்றன. சத்தியமங்கலம் பகுதியில் மழை வெள்ளம் கோவிலைச் சுற்றி தேங்கி நின்றது. மேலும் சத்தியமங்கலம் வேணுகோபால சாமி கோவிலை சுற்றியும் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. 
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி, மாதம்பாளையம், பனையம்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் நேற்று அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் நல்லூர் ஊராட்சி புதுப்பாளையம் பகுதியில் நஞ்சப்பன் (வயது 60) என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
அதேபோல் குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த பொங்கி அம்மாள் (60) என்பவரின் வீட்டின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த மழை காரணமாக மாதம்பாளையம் ஊராட்சியில் செட்டிக் குட்டை நிரம்பி வருகிறது. மேலும் புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோபி
கோபி சுற்றுவட்டார பகுதிகளான கொளப்பலூர், தாழ்குனி, சிறுவலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. அதேபோல் நேற்றும் மழை பெய்தது. இதனால் கொளப்பலூர் அருகே உள்ள தாழ்குனி குளம் நிரம்பி அதிக அளவு தண்ணீர் வெளியேறியது. இந்த தண்ணீர் கொளப்பலூர் பேரூராட்சி அலுவலகம் மற்றும் வாரச்சந்தையை சூழ்ந்து நின்றது.
இதேபோல் கொடுமுடி, தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.  தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையின் 27-வது கொண்டை ஊசி வளைவு அருகே மண் சரிவு ஏற்பட்டது. 

Next Story