புஞ்சைபுளியம்பட்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகை- குடிநீர் வழங்கக்கோரி போராட்டம்


புஞ்சைபுளியம்பட்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகை- குடிநீர் வழங்கக்கோரி போராட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2021 2:21 AM IST (Updated: 7 Dec 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
பெண்கள் முற்றுகை
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட வெங்கநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 150 வீடுகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 10.30 மணி அளவில் மாதம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் காளியப்பன் அங்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பெண்கள் கூறும்போது, ‘வெங்கநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதிக்கு பவானிசாகர் அணையில் இருந்து தொட்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக அந்த பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொது குழாய் மூலம் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விடப்படுகிறது.
குடிநீர் வழங்கக்கோரி...
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உள்ள 70 வீடுகளுக்கு சரிவர குடிநீர் வினியோகிக்கப்படுவதில்லை. இதனால் குடிப்பதற்கு நாங்கள் தண்ணீரின்றி அவதிப்படுகிறோம். இதுகுறித்து ஏற்கனவே மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனே எங்கள் பகுதியில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கூறும்போது, ‘விரைவில் உங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட பெண்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story