போலீசாரின் தடையை மீறி மறைமலைநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரணி
போலீசாரின் தடையை மீறி மறைமலைநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரணியாக சென்றனர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
பேரணி
பாபர் மசூதி இடிப்பு தினம் மற்றும் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரில் பேரணி நடைபெற்றது.
விடுதலை சிறுத்தை கட்சி செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி செயலாளர் கேது என்ற தென்னவன் தலைமையில் நடைபெற்ற பேரணியின்போது, மறைமலைநகரில் இருந்து கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் பின்புறம் உள்ள அம்பேத்கர் சிலை வரை ஜி.எஸ்.டி. சாலையில் பேரணி செல்வதற்கு அனுமதி இல்லை எனக்கூறி மறைமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில், இந்த பேரணி சம்பந்தமாக அனுமதி கேட்டு போலீசாரிடம் கடிதம் வழங்கியும் தங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறி போலீசாரின் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றனர்.
போக்குவரத்து நெரிசல்
இதையடுத்து மறைமலைநகரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை கையில் கொடியை ஏந்தியவாறு ஜி.எஸ்.டி. சாலை வழியாக ஊர்வலமாக சென்றனர்.
இந்த பேரணியில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, நகர நிர்வாகிகள் திருகாந்தன், வீரா, மணிமாறன், தலித் சுதாகரன், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த ஹைதர் அலி, ம.தி.மு.க.வை சேர்ந்த பாரத் ராஜேந்திரன், மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி காரணமாக மறைமலைநகர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேரணியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story