தம்பி மகனை காப்பாற்ற முயன்ற போது கொசஸ்தலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி உடல் மீட்பு
திருவள்ளூர் அருகே நீரில் மூழ்கிய தம்பி மகனை காப்பாற்ற முயன்ற போது கொசஸ்தலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
கொசஸ்தலை ஆற்றில்...
திருவள்ளூரை அடுத்த காரணி நிஜாம் பட்டு இருளர் காலனியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 45). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் பாலாஜி தனது தம்பி மகனான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (7) என்பவருடன் காரணி நிஜாம் பட்டு பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிறுவன் கார்த்திக் நீரில் அடித்துச் செல்லப்பட்டான். இதைக்கண்ட பாலாஜி உடனடியாக ஆற்றில் குதித்து கார்த்திக்கை காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் கார்த்திக் மறுகரையில் ஏறி தப்பினான். ஆனாலும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலாஜி மாயமானார்.
உடல் கரை ஒதுங்கியது
இதை அறிந்த அப்பகுதி சேர்ந்த மக்கள் திருவள்ளூரில் உள்ள தாலுகா போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாலாஜியை தேடினார்கள்.
ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் நேற்று அடித்துச் செல்லப்பட்ட பாலாஜியின் உடல் திருவள்ளூரை அடுத்த குன்னவளம் பகுதியில் உள்ள தரைப்பாலம் அருகே அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story