ஈரோடு மாவட்டத்தில் மாடி தோட்டம் அமைக்க மானியம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
ஈரோடு மாவட்டத்தில் மாடி தோட்டம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் மாடி தோட்டம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
மாடி தோட்ட தொகுப்பு
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள், ஊட்டம் தரும் செடிகள் தொகுப்பு, மாடி தோட்ட தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஈரோட்டில் நடந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பயனாளிகளுக்கு மாடி தோட்ட தொகுப்புகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காய்கறிகள் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவாக உள்ளது. தினமும் 100 கிராம் பழங்களையும், 300 கிராம் காய்கறிகளையும் உணவில் எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் 120 கிராம் காய்கறிகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் அமைக்க ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.13½ லட்சம் செலவில் மாடி தோட்டம் அமைக்க தேவையான தொகுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த தொகுப்பில் 6 வகை காய்கறி விதைகள், செடி வளர்க்கும் 6 பைகள், 2 கிலோ தென்னை நார்கட்டிகள், 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணிகள், 100 மி.லிட்டர் இயற்கை பூச்சி விரட்டி, ரூ.900 மதிப்புடைய மாடி தோட்ட தொகுப்பு உள்ளன. இவை 75 சதவீத மானியத்தில் ரூ.225 விலையில் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரம் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.
மானியம்
ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் தங்களின் வீட்டிலேயே காய்கறி தோட்டம் அமைத்து தங்களின் அன்றாட உணவில் சத்தான காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம். கத்தரி, மிளகாய், வெண்டை, தக்காளி, அவரை, பீர்க்கன், புடலை, பாகல், சுரைக்காய், கொத்தவரை, சாம்பல் பூசணி, கீரைஆகிய 12 விதைகள் அடங்கிய ரூ.60 மதிப்புடைய தொகுப்பு 75 சதவீதமானியத்தில் ரூ.15 விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ரூ.1 லட்சத்து 71 ஆயிரம் மானியத்தில் 3 ஆயிரத்து 800 காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட உள்ளன.
மூலிகை செடிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உடைய பழங்கள் மற்றும் காய்கறிகளான நெல்லி, பப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, திப்பிலி, கற்பூரவல்லி, புதினா ஆகிய 8 செடிகள் கொண்ட ரூ.100 மதிப்புடைய நோய் எதிர்ப்பு சக்தி தரும் மூலிகை செடிகள் தொகுப்பு ரூ.25-க்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 5 ஆயிரம் தொகுப்புகள் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மானியத்தோடு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டங்களை பொதுமக்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
விழாவில் வேளாண்மை இணை இயக்குனர் சின்னுசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகேசன், தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story