விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 8 Dec 2021 2:43 AM IST (Updated: 8 Dec 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

கடத்தூர்
விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. 
நஷ்ட ஈடு
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட்டில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் ரமணி (வயது 48). இவர் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி அரசு பஸ்சில் பயணம் செய்தார். வெலிங்டன்பாலம் அருகில் அவர் இறங்கும்போது தவறி கீழே விழுநந்தார். அப்போது அவர் படுகாயம் அடைந்து இறந்துவிட்டார்.
இந்த உயிரிழப்புக்கு நஷ்ட ஈடு வழங்கக்கோரி ரமணியின் குடும்பத்தினர் கோபி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ரமணியின் குடும்பத்தினருக்கு 13 லட்சத்து 52 ஆயிரத்து 289 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி தீர்ப்பளித்தார். 
நிறைவேற்று மனு
 இதுகுறித்து போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் ரமணியின் குடும்பத்துக்கு 17 லட்சத்து 50 ஆயிரம் வழங்க முடிவானது. ஆனால் போக்குவரத்து கழகம் இழப்பீடை வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து ரமணியின் குடும்பத்தினர் நிறைவேற்று மனுவை கோபி கோர்ட்டில் தாக்கல் செய்தார்கள். 
இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி ரமணி குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி அப்போது ஒரு அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
 பஸ் ஜப்தி
அதன்பின்னர் அரசு போக்குவரத்து கழகம் ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் மட்டும் நஷ்ட ஈட்டுத் தொகையாக கோர்ட்டில் செலுத்தியது. மீதித் தொகையை செலுத்தவில்லை. இதனால் கடந்த மாதம் 9-ந் தேதி மீண்டும் ஒரு அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஜெகநாதன் உத்தரவிட்டார். 
அதன்பேரில் கோர்ட்டு ஊழியர்கள் நேற்று காலை கோபி பஸ்நிலையத்தில் இருந்து ஈரோடு செல்ல நின்றிருந்த ஒரு அரசு பஸ்சை ஜப்தி செய்தார்கள். 

Next Story