நூல்விலை உயர்வால் பாதிப்பு: மத்திய ஜவுளி மந்திரியிடம் கோரிக்கை மனு- எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்
நூல் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கோரிக்கை மனுவை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மத்திய ஜவுளி மந்திரியிடம் வழங்கினார்கள்.
ஈரோடு
நூல் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கோரிக்கை மனுவை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மத்திய ஜவுளி மந்திரியிடம் வழங்கினார்கள்.
மத்திய மந்திரியிடம் மனு
நூல் விலை உயர்வால் ஜவுளித்துறையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. விசைத்தறியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மட்டுமின்றி ஜவுளித்துறை சார்ந்த அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே நூல் விலையை குறைக்க வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
அவர்களின் சார்பாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. சார்பில் அ.கணேசமூர்த்தி எம்.பி. மற்றும் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. ஆகியோர் மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ்கோயலை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்கள்.
நூல் விலை உயர்வு
இதுதொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நூல் விலை கடந்த 2 மாதங்களாக கட்டுப்பாடு இல்லாமலும், எதிர்பாராமலும் உயர்ந்து வருகிறது. இதனால் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களும், விசைத்தறியாளர்களும் முடங்கிப்போய் உள்ளனர். வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஒப்பந்தம் செய்ய ஆயத்த ஆடை மற்றும் இதர ஜவுளி பொருட்களை தயாரிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.
மத்திய அரசின் கட்டுப்பாடு இல்லாத நூல் ஏற்றுமதி, உள்நாட்டு தேவைகளை கவனத்தில் கொள்ளாமல் அனுமதிக்கப்படும் ஏற்றுமதி ஆகியவை நூல் விலை உயர்வுக்கு காரணம். கொரோனா காலக்கட்டத்தில் மூடப்பட்ட நூற்பாலைகளால் நூல் உற்பத்தி குறைந்ததும் காரணமாக கூறப்படுகிறது.
வாழ்வாதாரம் இழப்பு
ஆனால் நூல் விலை உயர்வு காரணமாக, இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் ஒப்பந்தங்களை முடியாத அளவுக்கு நம்பிக்கை இழந்து உள்ளனர். இது தொடர்ந்தால் ஜவுளித்தொழிலில் ஈடுபட்டு வரும் கோடிக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். எனவே மத்திய அரசு தாமதப்படுத்தாமல் இதற்கான தீர்வை கண்டுபிடித்து ஜவுளித்தொழிலை காப்பாற்ற வேண்டும். ஜவுளித்துறை அதிகாரிகளையும் அந்த தொழில் சார்ந்த அமைப்புகளையும் மத்திய ஜவுளித்துறை மந்திரி உடனடியாக அழைத்து பேச வேண்டும்.
இதுதொடர்பான கோரிக்கை மனு மத்திய மந்திரியிடம் வழங்கப்பட்டு உள்ளது. இதுபோல் ஜவுளித்துறையினரின் சிரமமான சூழலை கருதி தமிழக முதல்-அமைச்சரும் நூல் விலை ஏற்றம் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். எனவே பிரச்சினையின் தீவிரம் கருதி மத்திய அரசு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story