சிவகிரி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் நகையை பறித்த 2 வாலிபர்கள் கைது
சிவகிரி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி
சிவகிரி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மூதாட்டி
சிவகிரி மின்னபாளையம் அருகே உள்ள குட்டப்பாளையத்தை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 75). இவருடைய கணவர் இறந்துவிட்டார். இதனால் மகன் பெரியசாமியுடன் வசித்து வருகிறார். முத்தம்மாள் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். பெரியசாமியும், அவருடைய மனைவியும் வீட்டின் உள்ளே படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இரவு 10.30 மணி அளவில் மர்மநபர்கள் 2 பேர் மோட்டார்சைக்கிளில் பெரியசாமி வீட்டு முன்பு வந்து நின்றனர். அவர்கள் 2 பேரும் முகமூடி அணிந்திருந்தனர்.
நகை பறிப்பு
அவர்களை பார்த்ததும் முத்தம்மாள் திடுக்கிட்டு எழுந்தார். இதனால் அவர் சத்தம் போடாமலிருக்க மர்மநபர் ஒருவர் அவரது கையால் முத்தம்மாள் வாயை மூடினார். அதன்பின்னர் மற்றொருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தங்கசங்கிலியை வெடுக்கென பறித்தார். பின்னர் அங்கு நின்றிருந்த மோட்டார்சைக்கிளில் ஏறி மர்மநபர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
இதற்கிடையே முத்தம்மாள், ‘திருடன் திருடன்’ என்று சத்தம் போட்டார். சத்தம் கேட்டு பெரியசாமியும், அவருடைய மனைவியும் வெளியே வந்து பார்த்தனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பெரியசாமி சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
2 பேர் கைது
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துவிட்டு தப்பித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று பகல் 11 மணி அளவில் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி நால்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மின்னபாளையம் அருகே உள்ள குட்டப்பாளையத்தை சேர்ந்த யுவராஜ் (25), கோட்டைக்காட்டு வலசை சேர்ந்த கவுரிசங்கர் (28) ஆகியோர் என்பதும், இவர்கள் 2பேரும் மூதாட்டி முத்தமாளிடம் நகையை பறித்ததையும் ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story