ஈரோடு அரசு பள்ளிக்கூடத்தில் வில்லுப்பாட்டு, நடனம் மூலம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள்


ஈரோடு அரசு பள்ளிக்கூடத்தில் வில்லுப்பாட்டு, நடனம் மூலம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள்
x
தினத்தந்தி 9 Dec 2021 2:37 AM IST (Updated: 9 Dec 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அரசு பள்ளிக்கூடத்தில் வில்லுப்பாட்டு, நடனம் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகிறார்கள்.

ஈரோடு
ஈரோடு அரசு பள்ளிக்கூடத்தில் வில்லுப்பாட்டு, நடனம் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகிறார்கள். 
வில்லுப்பாட்டு, நடனம்
ஈரோடு பெரியார் வீதியில் அரசு தொடக்க பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 520 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த நவம்பர் மாதம் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டன. கிட்டதட்ட 1½ ஆண்டுகளாக வீடுகளில் முடங்கி கிடந்த மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று நேரடி வகுப்பில் சேர்ந்தனர்.
மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் கல்வி கற்க இந்த     பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்கள்  திட்டமிட்டனர். அதன்படி வகுப்பறைகளில் வழக்கமான கற்பித்தலை மாற்றி, பாடங்களுக்கு ஏற்ப வில்லுப்பாட்டு, நடனம், குரலிசை, ஆடல்-பாடல் என கல்வி சூழலை மாற்றி அமைத்தனர்.
99 சதவீதம் வருகை
கடந்த ஒரு மாத காலத்தில், ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடக்கத்தில் 70 சதவீதம் இருந்த மாணவர்களின் வருகைப்பதிவு தற்போது 99 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதனால் மாணவர்களின் தனித்திறன்கள் வெளிப்படுவதாகவும், கற்றல் திறன் அதிகரித்திருப்பதாகவும் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
ஆடல், பாடல் கற்பித்தலால், வகுப்பறை கல்வியை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்வதுடன் ஆசிரியர், மாணவர்கள் இடையே தோழமை உணர்வு அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாணவர்களின் மனநிலையை ஒருமுகப்படுத்த யோகாவும், உடற்பயிற்சியும், மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.
அழகிய ஓவியங்கள்
பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க அரசின் நிதியை எதிர்பாராமல், ஆசிரியர்களே இணைந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் பள்ளிக்கூட சுவர்களில் பல்வேறு அழகிய ஓவியங்களை வரையப்பட்டு உள்ளன.
அதன்படி பொது சுகாதாரம், போக்குவரத்து விதிகள், நல்ல பழக்கங்கள், பொது அறிவு ஆகியவற்றை போதிக்கும் படக்காட்சிகளுடன், அறிவியல், கணிதம், சமூகவியல் உள்ளிட்ட பாடங்களை எளிதில் புரிய வைக்கும் ஓவியங்களும் சுவர்களில் வரையப்பட்டு உள்ளன. மேலும் பொன் மொழிகளும் ஆங்காங்கே எழுதப்பட்டு உள்ளன.

Next Story