புகார் பெட்டி
புகார் பெட்டி
நிழற்குடை வேண்டும்
அம்மாபேட்டை அருகே உள்ள கல்பாவி ஊராட்சிக்கு உள்பட்டது தொட்டிபாளையம். இங்கு நிழற்கூட வசதி இல்லை. இதனால் பஸ்சுக்காக காத்து நிற்கும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி தொட்டிபாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சு.சிலம்பரசன், கல்பாவி.
தேங்கும் கழிவுநீர்
புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு சாக்கடை கழிவுநீர் பல நாட்களாக தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. மேலும் அருகே குப்பைகளும் கொட்டப்பட்டு உள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே கழிவுநீர் தேங்காதவாறும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மு.சதாசிவம், புஞ்சைபுளியம்பட்டி
ஆபத்தான குழி
ஈரோடு சூளை வேலாநகர் செல்லும் ரோட்டில் ஆபத்தான குழி உள்ளது. இந்த குழியால் அடிக்கடி அந்தப்பகுதியில் விபத்து ஏற்படுகின்றது. மேலும் இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் செல்லமுடியவில்லை. எனவே இந்த ஆபத்தான குழியை மூட சம்பந்தபட்டத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள்மொழி, ஈரோடு.
ஒளிராத விளக்கு
ஈரோடு கொல்லம்பாளையம் வண்டிக்காரன் தோட்டம் அருகே மின்கம்பம் உள்ளது. இதில் தெருவிளக்கு கடந்த பல ஆண்டுகளாக ஒளிரவில்லை. இதனால் அந்த பகுதியே இருளில் மூழ்கி கிடக்கிறது. இதை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே தெருவிளக்கு ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வண்டிக்காரன்தோட்டம்
குவிந்து கிடக்கும் குப்பைகள்
ஈரோடு வில்லரசம்பட்டி அருகே உள்ளது தொட்டிபாளையம். இந்த கிராம பஸ் நிறுத்தம் அருகில் பலர் குப்பைகளை கொட்டி சென்று விடுகிறார்கள். இதனால் இந்த குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பல்வேறு தொற்றுநோய்கள் பரவவாய்ப்பு உள்ளது. ேமலும் இந்த குப்பைகள் காற்று அடிக்கும் போது பறந்து வாகனங்களில் செல்லுபவர்கள் மீது விழுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
ஊர்பொதுமக்கள், தொட்டிபாளையம், ஈரோடு.
அடிக்கடி விபத்து
ஈரோடு-பெருந்துறை ரோட்டில் முக்கியமான பகுதியாக இருப்பது செங்கோடம்பள்ளம். இங்கு நீண்ட நாட்களாக தெருவிளக்குகள் எரிவதில்லை. பெருந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி வரும் வாகனங்கள், ஈரோட்டில் இருந்து பெருந்துறை நோக்கி செல்லும் வாகனங்கள் இந்த பகுதியை கட்டுப்பாடு இல்லாத வேகத்தில் கடந்து செல்கின்றன. அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. பாதசாரிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே செங்கோடம்பாளையம் பிரிவு பகுதியில் தெருவிளக்குகள் முறையாக எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், செங்கோடம்பாளையம்.
குண்டும்-குழியுமான ரோடு
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சவீதா சந்திப்பு பகுதிக்கு செல்லும் நாச்சியப்பா வீதி மற்றும் அகில்மேடு மெயின் வீதி பகுதிகளில் ரோடு பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த ரோட்டில் கிடக்கும் பள்ளங்களால் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மழைக்காலங்களில் இந்த குழிகளில் தண்ணீர் தேங்குவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வாசுகி வீதி, ஈரோடு.
Related Tags :
Next Story