புஞ்சைபுளியம்பட்டி அருகே பரபரப்பு; அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிக்கு வந்த பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு


புஞ்சைபுளியம்பட்டி அருகே பரபரப்பு; அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிக்கு வந்த பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 9 Dec 2021 2:38 AM IST (Updated: 9 Dec 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி அருகே அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிக்கு வந்த பொக்லைன் எந்திரம் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிக்கு வந்த பொக்லைன் எந்திரம் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம் குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பெரிச்சிகவுண்டன்புதூரில் இருந்து குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பவானிசாகர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வி.ஏ.பழனிசாமி, பவானிசாகர் ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணம்மாள் மற்றும் பொதுமக்கள் நேற்று தொட்டியனூர் அருகே குழாய் பதிக்கும் பணி நடந்து கொண்டிருக்கும் இடத்துக்கு சென்று பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் நம்பியூர் துணை தாசில்தார் சலீம் முன்னிஷா, புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாற்று பாதையில்...
அதற்கு பொதுமக்கள் கூறும்போது, ‘பெரிச்சி கவுண்டன்புதூரில் இருந்து காவிலிபாளையம் குளத்திற்கு தண்ணீர் நேரடியாக கொண்டு சென்றால் உபரி நீர் அருகில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றுவிடும். இதனால் எந்த பயனும் இல்லை
எனவே பெரிச்சிகவுண்டன் புதூர் கிராமத்தில் இருந்து குமாரகவுண்டன் பாளையம் குட்டை வழியாக குழாய் அமைத்தால் தேவம்பாளையம், சின்னாங் குட்டை ஆகிய பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறும். இதுகுறித்து கடந்த ஜனவரி மாதமே அத்திக்கடவு-அவினாசி திட்ட கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்துள்ளோம். எனவே குட்டை வழியாக காவிலிபாளையம் குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
பணி நிறுத்தம்
பின்னர் அதிகாரிகள் கூறும்போது, ‘இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து குழாய் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story