சித்தோடு தனியார் வங்கியில் விடிய, விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
சித்தோடு தனியார் வங்கியில் விடிய, விடிய பெண் ஒருவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பவானி
சித்தோடு தனியார் வங்கியில் விடிய, விடிய பெண் ஒருவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளிருப்பு போராட்டம்
பவானியை அடுத்த சித்தோடு தட்டாங்குட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். அவருடைய மனைவி பிரியா (வயது 44). இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
பிரியா நேற்று முன்தினம் மதியம் 3 மணி அளவில் சித்தோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சென்றார். பின்னர் நகை அடமான மோசடியில் ஈடுபட்டதாக கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பணி முடிந்தும் ஊழியர்கள் வங்கியை பூட்ட முடியாமல் தவித்தனர். நேற்று அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய அவர் போராட்டத்தை தொடர்ந்தார்.
நகை அடமானம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார், வங்கி நிர்வாகத்தினர் அங்கு சென்று பிரியாவிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
பிரியா கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி தனது 3½ பவுன் தங்க சங்கிலியை சித்தோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.30 ஆயிரத்துக்கு அடமானம் வைத்துள்ளார். அதன்பின்னர் அவர் வங்கியிடம் இருந்து தனது தேவைக்காக ஏப்ரல் 17-ந் தேதி ரூ.28 ஆயிரம் பெற்றுக்கொண்டார். இதன் மூலம் அவர் மொத்தம் ரூ.58 ஆயிரம் வங்கியில் செலுத்த வேண்டியதிருந்தது. இதில் அசல் மற்றும் வட்டித் தொகையாக ரூ.50 ஆயிரத்தை அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந் தேதி வங்கியில் செலுத்தியுள்ளார்.
ரூ.82,800 கடன்
அதைத்தொடர்ந்து தான் கட்ட வேண்டிய ரூ.8 ஆயிரம் மற்றும் நிலுவைத் தொகையை 3 மாதங்களுக்குள் கட்டி விடுவதாக அப்போதைய மேலாளரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்ட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.8 ஆயிரமும், அதற்குண்டான வட்டித் தொகையும் செலுத்த முன்வந்துள்ளார்.
அப்போதுதான் அவரது நகை கணக்கில் மேலும் பாக்கி தொகையாக ரூ.82 ஆயிரத்து 800 கடன் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த பிரியா வங்கி மேலாளரிடம் சென்று கேட்டார். ஆனால் அவர் அதுபற்றி தகவல் ஏதும் கூறாமல் கடந்த 3 மாதங்களாக காலம் தாழ்த்தி வந்துள்ளார்
பதில் கூறவில்லை
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 3 மணி அளவில் வங்கிக்கு சென்ற பிரியா தன்னுடைய நகையை கொடுக்குமாறும், கட்ட வேண்டிய நிலுவைத் தொகையை தான் கட்ட தயாராக உள்ளதாகவும் மேலாளரிடம் தெரிவித்துள்ளார் அதற்கு வங்கி மேலாளர் முறையான பதில் ஏதும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் திடீரென வங்கியின் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார்.
விசாரணை
மேலும் இதுபற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா வங்கி மேலாளர், நிதி நிறுவன ஆலோசகர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் பவானி அடுத்த ஜம்பை பகுதியைச் சேர்ந்த முன்னாள் மேலாளர், பிரியா ரூ.82 ஆயிரத்து 800 கூடுதலாக செலுத்த வேண்டியதாக வரவு வைத்ததும், சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இறந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வங்கி நிர்வாகத்தினர் பிரியாவிடம், ‘உங்களுக்கு வழங்க வேண்டிய 3½ பவுன் தங்க நகை குறித்து தலைமை நிறுவனத்திற்கு தெரியப்படுத்தி ஒரு வார காலத்துக்குள் உங்கள் நகையை திருப்பி வழங்க ஏற்பாடு செய்யப்படும்’ என்று உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட அவர் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.
Related Tags :
Next Story