100 ரூபாய் தகராறில் கட்டிடத்தொழிலாளி அடித்துக்கொலை


100 ரூபாய் தகராறில் கட்டிடத்தொழிலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 9 Dec 2021 5:35 AM IST (Updated: 9 Dec 2021 5:35 AM IST)
t-max-icont-min-icon

100 ரூபாய்க்கு ஏற்பட்ட தகராறில் கட்டிடத்தொழிலாளி இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். சக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி,

ஆவடி ஆனந்தா நகர் புலவர் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 50). அதே ஆனந்தா நகர் கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் பூபதி (25). இவர்கள் இருவரும் கட்டிடத்தொழிலாளிகள்.

நேற்று முன்தினம் ஆவடி காமராஜர் நகரில் வீடு கட்டுமான வேலைக்காக பூபதி, சிவகுமாரை அழைத்துச்சென்றார். மதியம் சாப்பாட்டு செலவுக்காக சிவகுமார், பூபதியிடம் 100 ரூபாயை வாங்கினார்.

வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு திரும்பிய இருவரும், செல்லும் வழியில் உள்ள மதுக்கடையில் மது அருந்தினர். அப்போது பூபதி, தான் கொடுத்த 100 ரூபாயை தரும்படி சிவகுமாரிடம் கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து இருவரும் வீட்டுக்கு திரும்பினர்.

அடித்துக்கொலை

சிவகுமார் வீட்டின் அருகே வந்தபோது மீண்டும் அவர்களுக்குள் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. சிவகுமார், தனது வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து பூபதியின் தலையில் அடித்தார். ஆத்திரமடைந்த பூபதி, அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து சிவகுமாரின் தலையில் சரமாரியாக தாக்கியதுடன், சிவகுமாரிடம் இருந்த இரும்பு கம்பியை பறித்தும் அவரது தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

உயிருக்கு போராடிய சிவகுமாரை அக்கம் பக்கத்தினர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிவகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சிவகுமார் தாக்கியதில் பூபதிக்கு மண்டை உடைந்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவரது தலையில் 4 தையல் போடப்பட்டது. இதுதொடர்பாக ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story