குப்பை தொட்டியில் இருந்து கழிவுகளை அகற்றாவிட்டால் புகார் தெரிவிக்கலாம்: சென்னை மாநகராட்சி கமிஷனர்


குப்பை தொட்டியில் இருந்து கழிவுகளை அகற்றாவிட்டால் புகார் தெரிவிக்கலாம்: சென்னை மாநகராட்சி கமிஷனர்
x

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் தினசரி குப்பைகளை சேகரிக்க 14 ஆயிரத்து 216 ‘காம்பேக்டர்’ குப்பை தொட்டிகளும், அவற்றை அகற்ற 261 ‘காம்பேக்டர்’ வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன. தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் சென்னை மாநகராட்சி மூலம் நேரடியாகவும், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் தனியார் நிறுவனம் மூலமாகவும் திடக்கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது குப்பை அகற்றும் ‘காம்பேக்டர்’ வாகனங்களின் இயக்க நேரம், வாகனங்கள் குப்பை தொட்டிகளில் இருந்து குப்பை அகற்றும் இடங்கள் குறித்த விவரங்களை https://chennaicorporation.gov.in/gcc/swm-bin என்ற மாநகராட்சி இணையதள இணைப்பில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை சேகரிக்கும் தூய்மை பணிகளில் ஈடுபடும் ‘காம்பேக்டர்’ வாகனங்கள் இணையதள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இடங்களில், குறிப்பிட்ட நேரத்தில் குப்பை தொட்டிகளில் இருந்து குப்பை கழிவுகளை அகற்றவில்லை எனில் பொதுமக்கள் ‘1913’ என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த புகார்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story