வாலாஜாபாத் அருகே ஒப்பந்ததாரர் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளை


வாலாஜாபாத் அருகே ஒப்பந்ததாரர் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 9 Dec 2021 6:38 PM IST (Updated: 9 Dec 2021 6:38 PM IST)
t-max-icont-min-icon

வாலாஜாபாத் அருகே ஒப்பந்ததாரர் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

வீட்டின் பூட்டு உடைப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள நாயக்கன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் என்.ஆர்.பழனி (வயது 49). அ.தி.மு.க. விவசாய அணி பிரிவு காஞ்சீபுரம் மாவட்ட செயலாளராகவும், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இவர் வசித்து வந்த பழைய வீட்டை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிதாக வீடு கட்டி உள்ளார்.

புதிய வீட்டின் பின்புறம் உள்ள இடிக்காமல் இருந்த பழைய வீட்டின் அறையில் கடந்த ஒரு ஆண்டு காலமாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கான கிரகபிரவேசம் நடைபெற்றது. கிரகபிரவேசம் முடிந்த நிலையில் பழைய வீட்டின் அறையை பூட்டிவிட்டு புதிய வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார்.

நேற்று அதிகாலையில் பழனி பின்புறம் உள்ள பழைய வீட்டுக்கு சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

கொள்ளை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 55 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.3½ லட்சம் ரொக்கப்பணம் மற்றும் வீட்டு கிரகபிரவேசத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள், அளித்த பரிசு பொருட்கள், மொய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரிதது வருகின்றனர்.


Next Story