ரேஷன் கடை ஊழியரை தாக்கி மனைவியிடம் சங்கிலி பறிப்பு


ரேஷன் கடை ஊழியரை தாக்கி மனைவியிடம் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 9 Dec 2021 8:14 PM IST (Updated: 9 Dec 2021 8:14 PM IST)
t-max-icont-min-icon

நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையர்கள் ரேஷன் கடை ஊழியரை தாக்கி அவரது மனைவியிடம் சங்கிலியை பறித்து சென்றனர்.

பணம் கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மங்கலம் ஊராட்சியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஜடராயன் (வயது 62). இவர் நெல்வாய் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி சுலோச்சனா (58). எருக்குவாய் கண்டிகையில் சத்துணவு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் கீழ்ப்பகுதியில் ஜடராயன்-சுலோச்சனா ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்தனர். இந்த தம்பதியரின் மகள் சுஜாதா-மருமகன் சரவணன் ஆகியோர் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

இந்தநிலையில்,நேற்று அதிகாலையில் 3 கொள்ளையர்கள் இவர்களது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டின் பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். இந்த சம்பவத்தை கண்டு ஜடராயன் திருடன், திருடன் என்று கத்தியவாறு அவர்களை பிடிக்க முயன்றார்.

இந்த சத்தம் கேட்டு அவரது மனைவி சுலோச்சனா எழுந்து ஓடி வந்தார்.

சங்கிலி பறிப்பு

அப்போது கொள்ளையர்கள் 3 பேரும், ஜடராயன் தலையில் இரும்பு கம்பியால் தாக்கினர். இதில், அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

பின்னர் கொள்ளையர்கள் சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த சுமார் 5 பவுன் மதிப்புள்ள தாலி சங்கிலியை பறித்து தப்பி ஓடினர்.

இதையடுத்து காயமடைந்த ஜடராயனை பெரியபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்தனர். தகவல் அறிந்த ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர்.

ஆறுமுக சுவாமி கோவில் அருகே குற்றவாளிகள் தங்களது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஜடராயன் வீட்டுக்கு நடந்து வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story