டிப்பர் லாரியில் கழன்று ஓடிய சக்கரம் மோதி முதியவர் சாவு


டிப்பர் லாரியில் கழன்று ஓடிய சக்கரம் மோதி முதியவர் சாவு
x
தினத்தந்தி 9 Dec 2021 9:34 PM IST (Updated: 9 Dec 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே டிப்பர் லாரியில் இருந்து கழன்று ஓடிய சக்கரம் மோதியதில், சாலையோரத்தில் டீ குடித்துக் கொண்டிருந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள எப்போதும் வென்றானை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 66). இவர் ஸ்பிக்நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் திருமண விழாவில் பங்கேற்றார். பின்னர் அவர் திருமண மண்டபம் அருகில் உள்ள கடையில் டீ வாங்கிக்கொண்டு, அருகில் உள்ள பூட்டிக்கிடந்த கடையின் முன்பக்கம் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக தூத்துக்குடி நோக்கி சென்ற டிப்பர் லாரியின் பின்சக்கர ஆக்சில் முறிந்தது. இதனால் இரண்டு டயர்கள் கொண்ட சக்கரம் எதிர்பாராதவிதமாக திடீரென கழன்று சாலையில் ஓடியது. இந்த சக்கரம் டீ குடித்துக் கொண்டிருந்த பால்ராஜ் மீது மோதியதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

மேலும் சக்கரம் மோதியதில் எம்.சவேரியார்புரத்தை சேர்ந்த லட்சுமணன் (46) மற்றும் வாஞ்சி மணியாச்சி பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் பாலமுருகன் (28) ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேட்டை நாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு ெசன்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பால்ராஜ் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story