சென்னிமலையில் நள்ளிரவில் வீடு புகுந்து வியாபாரியை தாக்கி காரில் கடத்தல்; 4 பேருக்கு வலைவீச்சு


சென்னிமலையில் நள்ளிரவில் வீடு புகுந்து வியாபாரியை தாக்கி காரில் கடத்தல்; 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Dec 2021 2:30 AM IST (Updated: 11 Dec 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை, டிச.11- சென்னிமலையில் நள்ளிரவில் வீடு புகுந்து வியாபாரியை தாக்கி காரில் கடத்திய மர்மநபர்கள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சென்னிமலை
சென்னிமலையில் நள்ளிரவில் வீடு புகுந்து வியாபாரியை தாக்கி காரில் கடத்திய மர்மநபர்கள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மர்மநபர்கள் 4 பேர்
சென்னிமலையில் உள்ள ஈங்கூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். இவரும், அவருடைய தாய் தமிழரசியும் (57) நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். 
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் யாரோ வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டது. 
சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த ரமேஷ் எழுந்து சென்று கதவை திறந்து பார்த்தார்.
அப்போது அங்கு மர்மநபர்கள் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அதில் 3 பேர் மட்டும் முககவசம் அணிந்திருந்தனர். திடீரென ஒருவர் ரமேசின் கையை பிடிக்க மற்ற 3 பேரும் தாங்கள் வைத்திருந்த தடியால் ரமேசை சரமாரியாக தாக்கினார்கள். இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். உடனே வீட்டில் தூங்கிகொண்டிருந்த அவரது தாய் எழுந்து சத்தம் போட்டார்.
தாக்கி கடத்தல்
பின்னர் ரமேசை மர்மநபர்கள் இழுத்து சென்று வீட்டு் அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் தள்ளினர். அதன்பின்னர் அங்கிருந்து தப்பித்து வேகமாக சென்றுவிட்டனர். 
இதுகுறித்து தமிழரசி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். 
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட ரமேசை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் ரமேஷ் தானாகவே சென்னிமலை போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார். அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
வலைவீச்சு
விசாரணையில், ‘ரமேஷ் பால் கறந்து தனியார் பால் பண்ணையில் ஊற்றி வியாபாரம் செய்து வந்துள்ளார். மேலும் ஒரு நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இதில் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். ஆனால் இதில் ரமேசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீடு செய்தவர்களுக்கு அவரால் பணத்தை திருப்பி கொடுக்க இயலவில்லை.
எனவே இதில் பாதிக்கப்பட்ட 4 பேர் நள்ளிரவில் வீடு புகுந்து ரமேசை தாக்கி காரில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அவரை கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டு அவர்களே தானாக விடுவித்தனர்.’ என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story