தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணம் உயர்த்தியதால் பி.எஸ்.என்.எல். இணைப்பு பெற பொதுமக்கள் ஆர்வம்- அதிகாரி தகவல்
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணம் உயர்த்தியதால் பி.எஸ்.என்.எல். செல்போன் இணைப்புகள் பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ஈரோடு
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணம் உயர்த்தியதால் பி.எஸ்.என்.எல். செல்போன் இணைப்புகள் பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கட்டண உயர்வு
இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த மாத இறுதியில் தங்கள் சந்தாதாரர்களுக்கான கட்டணத்தை உயர்த்தின. இது ஏழை எளிய மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் நடைபெறும் வகுப்புகள், கூட்டங்கள் என்று அனைத்துக்கும் செல்போன் இணைப்பு அத்தியாவசியமாக இருக்கிறது. இந்தநிலையில் செல்போன் இணைப்பு வழங்கும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றன.
பி.எஸ்.என்.எல்.
இந்தநிலையில் தனியார் செல்போன் இணைப்புகள் வைத்திருக்கும் பலரும், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். இணைப்பு பெற ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுபற்றி ஈரோடு பி.எஸ்.என்.எல். அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் 4ஜி சேவை வழங்குகின்றன. ஆனால் பி.எஸ்.என்.எல். 3ஜி சேவை மட்டுமே வழங்க முடிகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் இணையதள தேவைகளின் வேகத்துக்காக தனியார் நிறுவன இணைப்புகளை பெற்று வருகிறார்கள். இருப்பினும் தடை இல்லாமல் செல்போன் அழைப்புகளில் பேச வேண்டும் என்றால் பி.எஸ்.என்.எல். சிறந்தது என்பதால் பி.எஸ்.என்.எல். இணைப்புகள் தொடர்ந்து வழங்கி வந்தோம்.
ஆர்வம்
ஈரோடு தொலைத்தொடர்பு வட்டத்தை பொறுத்தவரை கடந்த மாதங்களில் சராசரியாக ஒரு வாரத்தில் 500 பேர் வரை பி.எஸ்.என்.எல். புதிய இணைப்பு அல்லது வேறு தனியார் சேவை நிறுவனங்களில் இருந்து பி.எஸ்.என்.எல். இணைப்புக்கு மாற்றம் செய்து வந்தனர். ஆனால் தனியார் நிறுவனங்களின் கட்டண உயர்வு அறிவிப்பை தொடர்ந்து இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே ஏராளமானவர்கள் பி.எஸ்.என்.எல். இணைப்புகள் வாங்கி வருகிறார்கள். கடந்த வாரம் 1000-க்கும் மேற்பட்டவர்கள் புதிதாக பி.எஸ்.என்.எல். சிம் கார்டுகள் வாங்கி உள்ளனர். இன்னும் ஏராளமானவர்கள் தனியார் நிறுவன இணைப்புகளை எண்களை மாற்றாமல் பி.எஸ்.என்.எல். இணைப்புக்கு மாற்ற ஆர்வமாக விண்ணப்பித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ‘பி.எஸ்.என்.எல். இணைப்பு பெற்று உள்ள வாடிக்கையாளர்கள் இணைய சேவையை வேகமாக பெறும் வகையில் 4 ஜி, 5ஜி இணைப்புகள் வழங்க மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் பணிகள் செய்ய காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story