ஈரோடு மாவட்டத்தில் சரக்கு-சேவை வரி விதிப்பை கண்டித்து 4 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைப்பு; ரூ.75 கோடி வர்த்தகம் பாதிப்பு


ஈரோடு மாவட்டத்தில் சரக்கு-சேவை வரி விதிப்பை கண்டித்து 4 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைப்பு; ரூ.75 கோடி வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 11 Dec 2021 2:30 AM IST (Updated: 11 Dec 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை கண்டித்து 4 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் ரூ.75 கோடி ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை கண்டித்து 4 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் ரூ.75 கோடி ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி. உயர்வு
நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் நூல் விலையை மாதம் ஒரு முறை அல்லது 2 மாதங்களுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையில் ஜவுளிகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜி.எஸ்.டி.) மாற்றம் செய்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி செயற்கை நூல்களுக்கு 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைத்தும், காட்டன் உள்ளிட்ட இயற்கை நூல்களுக்கு 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தியும் மத்திய அரசு உத்தரவிட்டது.
ஜவுளி கடைகள் அடைப்பு
5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக சரக்கு மற்றும் சேவை வரி உயர்த்தப்பட்டதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளதால் அவற்றை திரும்ப பெறுமாறு ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் மத்திய அரசு ஜவுளி உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதைத்தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி நேற்று ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி சார்ந்த விசைத்தறிகள், டையிங், பிராசசிங் உள்ளிட்ட நிறுவனங்கள், மற்றும் ஜவுளி விற்பனை சார்ந்த கடைகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டன. ஈரோட்டில் டி.வி.எஸ். வீதி, வெங்கடாச்சலம் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, கனிமார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ரூ.75 கோடி வர்த்தக பாதிப்பு
இதனால் ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை என ரூ.75 கோடி வரை வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜவுளி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் கலைச்செல்வன் கூறியதாவது:-
வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் ஜவுளி தொழிலுக்கு 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தபோது சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் மிகுந்த பாதிப்பு அடைந்தனர். 30 சதவீத வியாபாரிகள் ஜவுளித் தொழிலை விட்டே போய் விட்டனர்.
முன்வருவதில்லை
கொரோனா பாதிப்பால் தொழில் மீண்டும் முடங்கியது. அதற்கு பின்னர் நூல் விலை ஏற்றம், மூலப்பொருள் விலையேற்றம் ஏற்பட்டது. தற்போது சரக்கு மற்றும் சேவை வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக எப்படி தொழில் செய்வது என்று தெரியவில்லை. ஜவுளித்தொழில் செய்வதற்கு பலரும் ஆர்வமாக வந்த நிலையில், தற்போது ஜவுளித்தொழில் செய்ய யாரும் முன்வருவதில்லை.
மிகுந்த சிரமத்திற்கு இடையே நாங்கள் தொழில் செய்து வருகிறோம். சிறு, குறு, நடுத்தர வியாபாரிகளுக்கு இந்த 7 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி உயர்வால், மிகப்பெரிய இன்னலை உருவாக்கும். இந்த தொழிலை பலரும் விட்டு செல்லும் அபாயம் ஏற்படும்.
நூல் விலை உயர்வு
ஈரோடு மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் நெய்யப்படும் துணிகள் நாடு முழுவதும் சென்று வருகிறது. எங்களது துணிகளை ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான் அதிக அளவில் உபயோகிக்கின்றனர். மிகவும் குறைந்த விலையில் துணிகளை விற்பனை செய்து வருகிறோம். இப்படி, குறைந்த லாபத்தில் தொழில் செய்யும் எங்களுக்கு வரி உயர்வு மிகுந்த சிரமத்தை உருவாக்கும்.
தீபாவளிக்கு பின்பு அனைத்து ரக நூல்களின் விலையும்             உயர்ந்துள்ளது. 40-ம் எண் நூல் கிலோவுக்கு ரூ.240-ல் இருந்து ரூ.320 ஆகவும், 30-ம் எண் நூல் ரூ.200-ல் இருந்து ரூ.280 ஆகவும், 20-ம் எண் நூல் ரூ.140-ல் இருந்து ரூ.190 ஆகவும் உயர்ந்துள்ளது. நூல் விலை, மூலப்பொருள் விலை உயர்வோடு, சரக்கு மற்றும் சேவை வரியும் உயர்த்தப்பட்டால் ரூ.500-க்கு விற்ற துணி ரூ.900-க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படும்.
அடுத்த கட்ட போராட்டம்
எனவே மத்திய அரசு ஜவுளித்தொழிலுக்கு முன்பு இருந்ததை போல் 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை மட்டும் விதிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் இன்று (அதாவது நேற்று) 4 ஆயிரம் ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. துணி உற்பத்தியாளர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதேபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் கடையடைப்பு மற்றும் ஜவுளி உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் ரூ.75 கோடி வரையும், தமிழகம் முழுவதும் ரூ.500 கோடி வரையிலும் ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இது எங்களுடைய முதல் கட்ட நடவடிக்கை. இதற்கு அரசு செவிசாய்க்காவிட்டால், ஜவுளி சார்ந்த சங்கங்களுடன் இணைந்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story