டி.என்.பாளையம் அருகே பரிதாபம்; கொடிவேரிக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி சாவு- மற்றொரு மாணவர் மீட்பு
கொடிவேரிக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவர் மீட்கப்பட்டார்.
டி.என்.பாளையம்
கொடிவேரிக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவர் மீட்கப்பட்டார்.
ஆற்றில் குளித்தனர்
கோவை சிறுமுகையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். அவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுடைய மகன் யோகேஷ் (வயது 18). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் லிஜூ (18) என்ற மாணவரும் படித்து வருகிறார். இந்தநிலையில் இவர்கள் அதே வகுப்பில் படிக்கும் 4 மாணவர்களுடன் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பகுதிக்கு நேற்று மதியம் சுற்றுலா வந்தனர்.
கொடிவேரி அணை பகுதியின் பவானி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 6 பேரும் அங்கிருக்கும் மீன் மார்க்கெட் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு சென்றுள்ளனர். அங்கு ஆற்றில் இறங்கி 6 பேரும் ஆனந்தமாக குளித்துக்கொண்டு இருந்தனர்.
2 பேர் மூழ்கினர்
இதில் யோகேசும், லிஜூவும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. மற்ற 4 பேரும் கரையில் நின்று குளித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் யோகேசும், லிஜூவும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இதில் யோகேஷ் ஆற்று தண்ணீரில் மூழ்கினார். லிஜூ தத்தளித்துக்கொண்டு இருந்தார்.
இதைப்பார்த்த மற்ற மாணவர்கள் 4 பேரும் உடனே நீந்தி சென்று 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இதுபற்றி பங்களாப்புதூர் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
ஒருவர் சாவு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தனிப்பிரிவு போலீஸ்காரர் மஞ்சுநாதன் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் அங்கு வந்து 2 மாணவர்களுக்கும் உடனே முதல்-உதவி சிகிச்சை அளித்தனர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி யோகேஷ் பரிதாபமாக இறந்தார். லிஜூ சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story