1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 11 Dec 2021 6:55 PM IST (Updated: 11 Dec 2021 6:55 PM IST)
t-max-icont-min-icon

1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி
கேரளாவுக்கு கடத்த முயன்றதாக 1½ டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தநாரிபாளையத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக ஆனைமலை குடிமைப்பொருள் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் தனி தாசில்தார் முருகராஜ் தலைமையில் மண்டல துணை தாசில்தார் வாசுதேவன், வருவாய் ஆய்வாளர் நூர்முகமது ஆகியோர் விரைந்து சென்றனர். பின்னர் அர்த்தநாரிபாளையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஒரு இடத்தில் மினி லாரியில் மூட்டை, மூட்டையாக அரிசி இருப்பது தெரியவந்தது. மூட்டைகளை பிரித்து பார்த்ததில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகளை பார்த்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து லாரியில் 30 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் இருந்த 1½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஆனைமலையில் குடிமைப்பொருள் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை பொள்ளாச்சி நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் லாரியின் பதிவு எண்ணை வைத்து தப்பி ஓடிய கடத்தல்காரர்கள் குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து குடிமைப்பொருள் அதிகாரிகள் கூறுகையில், அர்த்தநாரிபாளையம் பகுதியில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்து உள்ளது. பொதுமக்களுக்கு அரசு ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா ரேஷன் அரிசியை வழங்கி வருகிறது. இதை வாங்கி வெளியில் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.  எனவே ரேஷன் அரிசியை கடத்துவோர் மட்டுமன்றி விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story