பொள்ளாச்சி மார்க்கெட்டில் வெற்றிலை விலை அதிகரிப்பு


பொள்ளாச்சி மார்க்கெட்டில் வெற்றிலை விலை அதிகரிப்பு
x
தினத்தந்தி 11 Dec 2021 6:56 PM IST (Updated: 11 Dec 2021 6:56 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி மார்க்கெட்டில் வெற்றிலை விலை அதிகரிப்பு

பொள்ளாச்சி

பொள்ளாச்சி மார்க்கெட்டில் ஏலத்திற்கு கொண்டு வரப்படும் வெற்றிலை விலை அதிகரித்து, ஒரு கட்டு ரூ.2,200-க்கு விற்பனை ஆனது. 

வெற்றிலை ஏலம்

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வெற்றிலை ஏலம் நடைபெறுவது வழக்கம். பொள்ளாச்சி சுற்று வட்டாரம் மற்றும் கேரளாவுக்கு வெற்றிலை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் ஏலம் நடைபெற்றது.
ஏலத்திற்கு ஆனைமலை, சமத்தூர், பெரியபோது, வாழைக்கொம்பு நாகூர் மற்றும் கோவை நஞ்சுண்டாபுரம், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் வெற்றிலையை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். ஒரு கட்டு வெற்றிலை ரூ.1,800 முதல் ரூ.2,200 வரை ஏலம் போனது. 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

விலை அதிகரிப்பு

பொள்ளாச்சியில் வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வெற்றிலை ஏலம் நடைபெறும். மேலும் 800 முதல் 900 வரை வெற்றிலை கட்டுக்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்படும். கொரோனா காரணமாக கடந்த ஒராண்டாக வெற்றிலை விற்பனை குறைந்து விட்டது. இதற்கிடையில் ஊரடங்கு காலத்தில் தோட்டத்தை சரியாக பராமரிக்க முடியவில்லை.

இதன் காரணமாக வெற்றிலை சாகுபடி குறைந்து வருகிறது. இதன் காரணமாக வாரத்தில் 3 நாட்கள் இருந்த ஏலம் 2 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. ஒரு கட்டுக்கு 8 ஆயிரம் வெற்றிலை இருக்கும். கடந்த வாரம் 200 கட்டுக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கடும் பனி பொழிவு காரணமாக செடிகளில் வெற்றிலை துளிர்விடுவதில்லை. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட வரத்து குறைந்து 150 கட்டுக்கள் மட்டுமே கொண்டு வரப்பட்டன. இதனால் விலை அதிகரித்து விற்பனை ஆனது. 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story