வாழை கன்றுகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

வாழை கன்றுகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் வாழை கன்றுகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் காட்டுப்பன்றிகனை கட்டுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
கிணத்துக்கடவு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து மரவள்ளி கிழங்கு, வாழை, தக்காளி, தென்னை ஆகியவற்றை சேதப்படுத்தி வந்தது. இதனால் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள கிணத்துக்கடவு, கோதவாடி, கொண்டம்பட்டி, நல்லட்டிபாளையம், தாமரை குளம், செட்டியக்காபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு இருக்கும் செடிகளையும் சேதப்படுத்தி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வருவாய்த்துறையினர், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
60 வாழைகள் சேதம்
கிணத்துக்கடவு பஸ் நிலையத்திலிருந்து கோடங்கிபாளையம் செல்லும் வழியில் உள்ள கணேஷ் குமார் என்பவரின் தோட்டத்தில் 1,400-க்கு மேற்பட்ட நேந்திரன் வாழை கன்றுகளை நடவு செய்தார்.
தொடக்கத்திலேயே காட்டுப்பன்றிகள் வாழைதோட்டத்திற்குள் புகுந்து 50-க்கும் மேற்ப்பட்ட வாழை கன்றுகளை கடித்துக் குதறி சேதப்படுத்தியது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டுப்பன்றிகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு இருந்த வாழை கன்றுகளை சேதப்படுத்தியது. மொத்தம் 60 வாழைகள் சேதமானது.
நஷ்டம்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கிணத்துக்கடவு கோதவாடி குளம் பகுதியில் காட்டு பன்றிகள் நடமாட்டம் இருந்தது. தற்போது குளம் சீரமைப்பு பணி முடிந்து குளத்தில் தண்ணீர் தேக்கப்பட்டுவருவதால் கோதவாடி குளம் பகுதியில் இரவு நேரங்களில் பதுங்கியிருந்த காட்டுப்பன்றிகள் தற்போது கிராம பகுதிக்கு புகுந்துள்ளது. கிணத்துக்கடவு பகுதிகளில் மீண்டும் வாழை உள்ளிட்ட பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப் படுத்துவதாக ஏற்கனவே வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எங்களுக்கு பெரியஅளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வரும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story