சித்தோடு அருகே பரபரப்பு: விஷவாயு கசிந்து ரசாயன தொழிற்சாலை உரிமையாளர் சாவு- 13 தொழிலாளர்கள் மயக்கம்
சித்தோடு அருகே விஷவாயு கசிந்து ரசாயன தொழிற்சாலை உரிமையாளர் இறந்தார். மேலும் 13 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தார்கள்.
பவானி
சித்தோடு அருகே விஷவாயு கசிந்து ரசாயன தொழிற்சாலை உரிமையாளர் இறந்தார். மேலும் 13 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தார்கள்.
ரசாயன தொழிற்சாலை
ஈரோடு மாவட்டம் சித்தோடு சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தாமோதரன் (வயது 48). இவர் சித்தோட்டில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரசாயன தொழிற்சாைல நடத்தி வந்தார்.
இந்த தொழிற்சாலையில் சாயப்பட்டறையில் துணிகளை பிளீச்சிங் செய்வதற்கு பயன்படுத்தும் குளோரின், ஹைட்ரோகுளோரிக் ரசாயனங்கள் பெரிய பெரிய சிலிண்டர்களில் அடைத்துவைத்து பட்டறைகளுக்கும், பல்வேறு நிறுவனங்களுக்கும் விற்கப்படுகிறது.
விஷவாயு கசிவு
இந்தநிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் தொழிற்சாலையின் குடோனில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய சிலிண்டரில் இருந்து ஹைட்ரோ குளோரிக் மற்றும் குளோரின் வாயு திடீரென கசிந்தது. அப்போது அங்கிருந்த தாமோதரன் சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்த மற்ற தொழிலாளர்கள் உடனே குடோனுக்குள் ஓடிவந்து தாமோதரனை மீட்க முயன்றார்கள். ஆனால் அவர்களும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தார்கள். சி்லர் மூச்சுத்திணறியவுடன் வெளியே ஓடிவந்துவிட்டார்கள்.
தொழிலாளர்கள் மீட்பு
இதுபற்றி உடனே சித்தோடு போலீசாருக்கும், பவானி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் விரைந்து வந்தார்கள்.
அதன்பின்னர் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்து குடோனுக்குள் சென்று தாமோதரனையும், மயக்கம் அடைந்த 13 தொழிலாளர்களையும் வெளியே கொண்டுவந்தார்கள். பிறகு ஆம்புலன்சுகளில் அனைவரும் ஏற்றப்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
உரிமையாளர் சாவு
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த டாக்டர்கள் தாமோதரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். மேலும் மயக்கம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 5 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டார்கள். எஞ்சியவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த தாமோதரனுக்கு பிரேமா (40) என்ற மனைவியும், அபிநவ் (12) என்ற மகனும், ஸ்ரீநிகேதா (7) என்ற மகளும் உள்ளனர்.
ஆறுதல்
இதற்கிடையே சம்பவம் நடைபெற்ற சித்தோடு ரசாயன தொழிற்சாலையை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் பார்வையிட்டார்கள்.
அதன்பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபர்களுக்கு ஆறுதல் கூறினார்.
தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து உரிமையாளர் இறந்ததும், தொழிலாளர்கள் 13 பேர் மயக்கம் அடைந்ததும் சித்தோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story