டாஸ்மாக்கை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்- ஈரோட்டில் அர்ஜூன் சம்பத் பேட்டி


டாஸ்மாக்கை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்- ஈரோட்டில் அர்ஜூன் சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 12 Dec 2021 2:53 AM IST (Updated: 12 Dec 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என்று ஈரோட்டில் அர்ஜூன் சம்பத் கூறினார்.

ஈரோடு
டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என்று ஈரோட்டில் அர்ஜூன் சம்பத் கூறினார்.
ஆர்ப்பாட்டம்
இந்து மக்கள் கட்சி சார்பில், ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
வேளாண் சட்டங்கள்
முன்னதாக அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
விவசாயிகள் என்ற போர்வையில் சிலர் டெல்லி நகரத்தை முற்றுகையிட்டு, வன்முறை நிகழ்த்தி, நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த ஒரு முயற்சி எடுத்தனர்.
இதன்காரணமாக பிரதமர் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றார். இதனால், விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வாபஸ் பெற்ற 3 வேளாண் சட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிரசார வாகனத்தை, பாரதியாரின் பிறந்தநாளில் தொடங்குகிறோம்.
டாஸ்மாக்கை மூட வேண்டும்
தமிழக தென்னை, பனை விவசாயிகள் கள்ளுக்கடையை திறக்கவும், கள் இறக்க அனுமதியும் கொடுக்க வேண்டும்.
 இல்லையென்றால் டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழக கள் இயக்கம் சார்பில் வருகிற ஜனவரி மாதம் 21-ந்தேதி தடையை மீறி கள் இறக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
 தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளுக்கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story