தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 12 Dec 2021 8:58 PM IST (Updated: 12 Dec 2021 8:58 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி


குவிந்து கிடக்கும் குப்பைகள்

  கோவை கே.கே புதூர் சாலை மஞ்சஸ்வரி காலனி எதிரில் சாலையோரத்தில் குப்பை தொட்டி உள்ளது. இந்த குப்பைத்தொட்டியில் குப்பைகள் அகற்றப்படவில்லை. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் அந்த குப்பைகளை கால்நடைகள், நாய்கள் தின்பதோடு, இழுத்து வந்து ரோட்டில் போட்டு செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  காளி ரஞ்சித், கோவை.
  
 போக்குவரத்து நெரிசல்

  பொள்ளாச்சியிலிருந்து உடுமலை செல்லும் மெயின் ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி, பல்லடம் ரோடு பிரியும் சாலை உள்ளது. இங்கு, காலை, மாலை என போக்குவரத்து அதிகமாக உள்ளது. ஆனால், போக்குவரத்தை சீரமைக்க உரிய அளவில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட இடங்களில் கூடுதலாக போலீசார் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  எஸ்.மோகன் குமார், பொள்ளாச்சி.
  
பழுதான தார்சாலை 

  கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் காந்திநகர், குறிஞ்சி நகர் போன்ற பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்து உள்ளன. இதனால் பொது மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் வாகனங்கள் அனைத்தும் தட்டுத்தடுமாறி செல்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இதேபோல் அந்த சாலையில் குப்பைகளும் குவிந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதான சாலையை சீரமைப்பதோடு, குப்பைகளை அகற்ற ஆவன செய்ய வேண்டும்.
  இலியாஸ், குனியமுத்தூர்.
  
  
விலைப்பட்டியல் வைக்கப்படுமா?

  பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல நடுத்தர ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் இல்லை. சில ஓட்டல்களில் விலைப்பட்டியல் நுகர்வோரின் கண்களுக்குத் தெரியும்படி வைக்கப்பட வில்லை. இதன்காரணமாக ஓட்டலுக்கு சாப்பிட வருவோர் பலர் உணவு பொருட்களின் விலை குறித்து தெரியாமலும், கேட்க தயங்கியிருக்கும் நிலையும் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உணவுப்பொருட்களின் விலை நுகர்வோருக்கு தெரியும் வகையில் வைக்க ஓட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
  அபிநந்தன், பொள்ளாச்சி.
  
  
ரோட்டில் உலா வரும் கால்நடைகள் 

  கோவை ராமநாதபுரம், சுங்கம் நெடுஞ்சாலை ரோடு ஆகிய பகுதிகளில் கால்நடைகள் அதிகஅளவில் சுற்றித்திரிகின்றன. மேலும், அந்த கால்நடை கள் ரோட்டில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகிறார்கள். இதேபோல் சாலையோரத்தில் நடந்து செல்லும் பொதுமக்களும் அந்த கால்நடைகள் துரத்துகிறது. எனவே சாலையோரத்தில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  ரஞ்சித், கோவை.
  
  
பஸ்கள் இயக்க வேண்டும்

  சுல்தான்பேட்டையில் இருந்து சூலூர் வரை மதியம் 1 மணி வரை மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் மற்ற நேரங்களில் பஸ்கள் வராததால் பொதுமக்கள், பெண்கள் பெரிய அளவில் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக மாலை நேரங்களில் இயக்கப்படாததால் மாணவ-மாணவிகளுக்கும் சிரமத்திற்கு உள்ளாகுகிறார்கள். இதனால் பொதுமக்கள் தனியார் பஸ்களை நாட வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பஸ்களை காலை முதல் இரவு வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  சண்முகம், செலக்கரிச்சல்.
  
  
பாதியில் நிற்கும் பணி 

  கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையத்தில் இருந்து மின்சார நிலையம் செல்லும் வழியில் சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு குவித்து வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த ஒரு ஆண்டாகியும் இதுவரை ரோடு போடப்படாமல் உள்ளது. இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. மேலும், விபத்துகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாதியில் விடப்பட்ட இந்த சாலையில் பணியை தொடங்க வேண்டும்.
  விஜயகுமாா், கோவில்பாளையம்.
  
  
குப்பைத்தொட்டி வேண்டும்

  கோவை மாநகராட்சி 26-வது வார்டு வெள்ளக்கிணறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் குப்பைத்தொட்டி இல்லை. இதனால் அப்பகுதியில் குப்பைகள் மலை போல் குவிந்து காணப்படுகிறது. மேலும் குப்பைகள் அகற்றப்படாதல் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அந்தப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு குப்பைத்தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  மணிமாறன், கோவை.
  
  
நாய்கள் தொல்லை

  கோவை ராமநாதபுரம், சுங்கம் ரவுண்டானா, ரேஸ்கோர்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்ட படி அந்த வழியாக வரும் பெண்கள், மாணவ-மாணவிகள் மீது விழுகிறது. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். குறிப்பாக 2 சக்கர வாகனங்கள் செல்பவர்களை துரத்துகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடையும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  வனிதாராணி, சுங்கம்.
  

Next Story