பவானி கூடுதுறையில் திதி, தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்- ஆற்றில் குளிக்க தடை


பவானி கூடுதுறையில் திதி, தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்- ஆற்றில் குளிக்க தடை
x
தினத்தந்தி 13 Dec 2021 2:17 AM IST (Updated: 13 Dec 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

பவானி கூடுதுறையில் திதி, தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் குவிந்தனர். அதேநேரம் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது

பவானி
பவானி கூடுதுறையில் திதி, தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் குவிந்தனர். அதேநேரம் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
அனுமதி மறுப்பு
கொரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி பவானி சங்கமேஸ்வரர் கோவில் உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டது.
மேலும் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பின்புறமுள்ள கூடுதுறையில் திதி, தர்ப்பணம் கொடுக்க ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடுவார்கள் என்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்படும். எனவே அங்கு செல்லவும் மக்களுக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.
பக்தர்கள் குவிந்தனர்
இதனால் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, தர்ப்பணம் ஆகியவற்றை ஆற்றங்கரை ஓரத்திலே செய்து வந்தனர். தற்போது நோய்த்தொற்றின் தீவிரம் குறைந்த நிலையில் உள்ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து பவானி கூடுதுறை கடந்த மாதம் திறக்கப்பட்டது. அன்று முதல் குறைந்த அளவு பக்தர்களே வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்து வந்தனர்
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். மேலும் அதிகாலை முதலே சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று சங்கமேஸ்வரரை வழிபட்டுச் சென்றனர்.
ஆற்றில் குளிக்க தடை
அய்யப்ப பக்தர்களும் வந்ததால் வழக்கத்துக்கு மாறாக பவானி கூடுதுறையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில் அருகே உள்ள அய்யப்ப சேவா படித்துறையில் நின்று குளித்து சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
பவானி கூடுதுறை மற்றும் கோவிலுக்கு வந்தவர்களை தெர்மாமீட்டர் மூலம் பரிசோதனை செய்த பிறகே ஊழியர்கள் அனுமதித்தனர். முக கவசம் அணியவும் பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டனர். எனினும் ஒரு சிலர் முக கவசம் அணியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக இடைவெளியும் கடைபிடிக்கவில்லை.

Next Story