ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்தது எப்படி?- திடுக்கிடும் தகவல்கள்
சித்தோடு அருகே ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்தது எப்படி என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பவானி
சித்தோடு அருகே ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்தது எப்படி என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுபற்றி போலீசார் விசாரணையில் கூறப்படுவதாவது:-
சாவு
ஈரோடு மாவட்டம் சித்தோடு சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். (வயது 48). இவர் சித்தோட்டில் உள்ள கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரசாயன தொழிற்சாலை நடத்தி வந்தார்.
இந்த தொழிற்சாலையில் சாயப்பட்டறையில் துணிகளை பிளீச்சிங் செய்வதற்கு பயன்படும் குேளாரின் திரவ நிலையில் கியாஸ் சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழிற்சாலையில் திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் ஆலையின் உரிமையாளர் தாமோதரன் பலியானார். மேலும் 13 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்த சம்பவம் அனைவரும் தெரிந்ததே. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விஷவாயு கசிவு
இந்த நிலையில் ஆலையில் இருந்து விஷவாயு கசிந்தது எப்படி? என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் போலீசாரின் விசாரணையில் கிடைத்து உள்ளது.
தாமோதரனின் ஆலையில் துணிகளை பிளீச்சிங் செய்யவும், தண்ணீரை சுத்தப்படுத்தவும் திரவ வடிவிலான குேளாரின் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதை வெளிமாநிலங்களில் இருந்து மொத்த விலைக்கு வாங்கி சில்லரை விற்பனை நிைலயத்துக்கு விற்பனை செய்து வந்து உள்ளார்.
சிலிண்டரில் அடைக்கப்பட்டுள்ள இந்த திரவ குளோரின் காற்றில் கரையும் போது ஹைட்ரோ குளோரைடு ஆக மாறி விஷ வாயுவாக மாறிவிடும். இந்த விஷவாயுவை சுவாசிக்கும்போது முதலில் மயக்கம் உண்டாகும். பின்னர் உயிரிழப்பு ஏற்படும். மேலும் மேலும் சுவாசிக்கும்போது உயிரிழப்பை ஏற்படுத்தும்
வால்வு சரியாக மூடப்படவில்லை
இந்த திரவ குளோரினை விற்பனை செய்யும்போது அதற்குண்டான பாதுகாப்பு உபகரணமான ஆக்ஸிஜன் முக கவசம் அணிந்து கொடுப்பது வழக்கம். திடீர் விபத்து ஏற்படும்போது செய்ய வேண்டிய முதல் உதவிக்கான அனைத்து உபகரணங்களும் ஆலையில் வைக்கப்பட்டு உள்ளது. விஷவாயு கசிந்தபோது இந்த உபகரணங்களை கையாள மறந்ததே உயிரிழப்புக்கு காரணமாகிவிட்டது.
மேலும் குறைந்த அளவிலான திரவ குளோரின் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரின் வால்வு சரியாக மூடப்படவில்லை. இதனால் விஷவாயு கசிந்து உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் 13 பேர் விஷவாயுவை சுவாசித்ததால் மூச்சுத்திணறி மயக்கம் அடைந்து உள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது. எனினும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story