மக்கள் மருத்துவர் என்று அழைக்கப்பட்ட டாக்டர் ஜீவானந்தம் பெயரில் இலவச மருத்துவ ஆலோசனை மையம்- சமூக ஆர்வலர் மேதா பட்கர் பங்கேற்பு

மக்கள் மருத்துவர் என்று அழைக்கப்பட்ட ஈரோட்டை சேர்ந்த டாக்டர் ஜீவானந்தம் பெயரில் மருத்துவ ஆலோசனை மையம் திறப்பு விழாவில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் கலந்து கொண்டார்.
ஈரோடு
மக்கள் மருத்துவர் என்று அழைக்கப்பட்ட ஈரோட்டை சேர்ந்த டாக்டர் ஜீவானந்தம் பெயரில் மருத்துவ ஆலோசனை மையம் திறப்பு விழாவில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் கலந்து கொண்டார்.
மக்கள் மருத்துவர்
ஈரோட்டை சேர்ந்தவர் டாக்டர் ஜீவானந்தம். இவர் தமிழக பசுமை இயக்கம் அமைப்பின் நிறுவனராக இருந்து செயல்பட்டு வந்தார். சுற்றுச்சூழலுக்கு எதிரான போராளியாக செயல்பட்டார். இந்தியா முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களின் ஒருங்கிணைப்பாளராகவும், வழிகாட்டியாகவும் இருந்த டாக்டர் ஜீவானந்தம் மக்கள் மருத்துவர் என்று போற்றப்பட்டார். அவர் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார்.
அதைத்தொடர்ந்து அவரது நினைவாக ஈரோட்டில் டாக்டர் ஜீவா இலவச மருத்துவ ஆலோசனை மையம் திறக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் நல சங்க நிறுவனர் வி.பி.குணசேகரன் முன்னிலை வகித்தார்.
மேதா பட்கர்-நீதிபதி சந்துரு
விழாவில் புகழ்பெற்ற சமூக ஆர்வலர் மேதா பட்கர் கலந்து கொண்டு டாக்டர் ஜீவானந்தம் இலவச மருத்துவ ஆலோசனை மையத்தை திறந்து வைத்தார். இதுபோல் விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, பத்ம விபூஷன் விருது பெற்ற தியாகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் கலந்து கொண்டு டாக்டர் ஜீவானந்தம் உருவச்சிலை, கூட்ட அரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பத்திரிகையாளர் சமஸ், பாடகர் கிருஷ்ணா, சுற்றுச்சூழல் ஆர்வலர் விஷ்ணு பிரியா ஆகியோருக்கு டாக்டர் ஜீவா பசுமை விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் போது பேசிய அனைவரும் டாக்டர் ஜீவானந்தத்தின் சிறப்புகள் குறித்து பேசி அவரது நினைவைபோற்றினார்கள்.
நீதிக்கான குரல்
பின்னர் நிருபர்களுக்கு சமூக ஆர்வலரும், சுற்றுச்சூழல் போராளியுமான மேதா பட்கர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
டாக்டர் ஜீவானந்தம் மிகுந்த மனிதநேயம் மிக்க பண்பாளர். பெரியார் மண்ணில் இருந்து பெரியாரை முழுமையாக உள்வாங்கியவர். அவர் சிறந்த காந்தியவாதியாகவும் இருந்தார். பெரியாரையும், காந்தியையும் இணைத்து செயல்பட்ட சமூகப்போராளி.
எங்கே சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எழுந்தாலும் அங்கே தனது எதிர்ப்பை பதிவு செய்து வந்தார். சாதாரண மக்களுக்கு குறிப்பாக பழங்குடியினர், ஆதிவாசிகளுக்கு நீதி மறுக்கப்படும்போதெல்லாம் அவர் அவர்களுக்கு ஆதரவுக்குரல் கொடுத்தார்.
விவசாயிகள் வெற்றி
அவரது குடும்பம் மிகப்பெரியது. அவரது பெயரில் தொடங்கப்பட்டு உள்ள அமைப்பானது அவரது எண்ணங்களையும் பிரதிபலிக்கும் என்று நம்புகிறேன். புதுடெல்லியில் ஒரு ஆண்டாக விவசாயிகள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்று உள்ளது. இந்தநேரத்தில் டாக்டர் ஜீவானந்தம் உயிருடன் இருந்திருந்தால் இந்த வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடி இருப்பார்.
இவ்வாறு சமூக ஆர்வலர் மேதா பட்கர் கூறினார்.
முடிவில் சித்தார்த்தா பள்ளி தாளாளர் ஜெயபாரதி நன்றி கூறினார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஈரோடு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






