மதுபோதை தகராறில் வாலிபர் கல்லால் அடித்து கொலை


மதுபோதை தகராறில் வாலிபர் கல்லால் அடித்து கொலை
x
தினத்தந்தி 13 Dec 2021 4:44 PM IST (Updated: 13 Dec 2021 4:44 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

தலையில் காயத்துடன்...

செங்கல்பட்டு-காஞ்சீபுரம் சாலையில் திண்பண்டங்கள் கடை நடத்தி வருபவர் பன்னீர் செல்வம். இவர் நேற்று முன்தினம் இரவு தனது கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில், நேற்று காலை வழக்கம் போல கடையை திறக்க முயன்றார். அப்போது கடையின் முன்பு மர்மநபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார்‌. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பன்னீர் செல்வம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் வாலிபரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கொலையாளி கைது

இந்தநிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் செங்கல்பட்டு நகர பகுதிகளில் பாட்டில் பொறுக்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அப்பகுதியில் விசாரணை செய்த போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அந்த நபர் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கல்லால் அடித்து கொன்று விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story