சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக கூறி கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்; கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்


சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக கூறி கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்; கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்
x
தினத்தந்தி 14 Dec 2021 2:07 AM IST (Updated: 14 Dec 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக கூறி கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுபற்றி கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தனர்.

ஈரோடு
சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக கூறி கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுபற்றி கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தனர்.
ஆர்ப்பாட்டம்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கையை மனுவாக கொடுத்தனர். மொடக்குறிச்சி அருகே உள்ள கனகபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் கனகபுரம் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ‘இங்கு கோஷம் எழுப்பக்கூடாது. உங்களுடைய பிரச்சினை குறித்து மனு கொடுங்கள். உரிய நடிவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, மாவட்ட வருவாய் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
சான்றிதழ் வழங்க லஞ்சம்
அந்த புகார் மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
கனகபுரம், ஜீவா நகர், பாறைவலசு, காங்கயம் பாளையம், கொண்டவநாய்க்கன் பாளையம், சேடர்பாளையம், சி.எஸ்.ஐ. காலனி உள்பட 14 கிராமங்களில் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். நாங்கள் பெரும்பாலும் விவசாய கூலி தொழிலாளர்கள்.
இறப்பு, வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் பெற வேண்டி கனகபுரம் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பிக்கும்போது அவர் சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிக்கிறார். மேலும் சான்றிதழ் வழங்குவதற்கு அவர் லஞ்சம் கேட்கிறார்.
நடவடிக்கை
வசதி படைத்தவர்கள் பணம் கொடுத்து சான்றிதழ் பெற்று விடுகின்றனர். ஆனால் எங்களை போன்ற தினக்கூலி தொழிலாளர்கள் பணம் கொடுத்து சான்றிதழ் வாங்க முடியவில்லை. மேலும் எங்கள் கிராமத்தை சேர்ந்த முதியவர்கள் சிலர் முதியோர் உதவித் தொகைக்காக விண்ணப்பித்த போது பெரும்பாலான மனுக்கள் தகுதி இல்லை என்று அவர் நிராகரித்து வருகிறார்.
அவருக்கு உடந்தையாக உதவியாளரும் செயல்பட்டு வருகிறார். எனவே கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

Next Story