தாசில்தார் முன்பு பட்டா கேட்டு தாய்- மகன் தீக்குளிக்க முயற்சி; சத்தியமங்கலத்தில் பரபரப்பு


தாசில்தார் முன்பு பட்டா கேட்டு தாய்- மகன் தீக்குளிக்க முயற்சி; சத்தியமங்கலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Dec 2021 2:13 AM IST (Updated: 14 Dec 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலத்தில் பட்டா கேட்டு தாய் மற்றும் மகன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் பட்டா கேட்டு தாய் மற்றும் மகன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டுமனை
சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதி ஆண்டவர் நகர். கடந்த 1989-ம் ஆண்டு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த பகுதியில் வீட்டுமனை பட்டா அரசின் சார்பில் வழங்கப்பட்டது. 
இங்கு வீட்டுமனை பட்டா பெற்ற பலர் வீடுகள் கட்டி குடியேறினர். பலர் வீடுகள் கட்டாமல் உள்ளனர். மற்றும் சிலர் தங்களுடைய வீட்டுமனைகளை பிறருக்கு விற்றுவிட்டு சென்றுவிட்டனர். 
இதைத்தொடர்ந்து வீட்டுமனை வாங்கியவர்கள் அந்த இடத்தில் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். இதனால் அந்த இடத்தை வாங்கியவர்கள் தங்களுடைய பெயருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
தீக்குளிப்போம்
இதையடுத்து அங்கு வீடு கட்டியவர்களுக்கு புதிதாக வீட்டுமனை பட்டா கொடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் அங்கு உள்ள ஏராளமான வீட்டுமனைகளில் யாரும் வீடு கட்டாமல் காலியாக உள்ளது என சத்தியமங்கலம் தாசில்தார் ரவிசங்கருக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து அங்கு ஆய்வு செய்வதற்காக சத்தியமங்கலம் தாசில்தார் ரவிசங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சென்றனர். 
அப்போது அந்த பகுதியை சேர்ந்த தங்கராஜ், தனது தாயாருடன் ரோட்டில் உட்கார்ந்து தனக்கு பட்டா வேண்டும் என்று கேட்டார். மேலும் வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து வந்ததுடன், எங்களுக்கு வீட்டுமனை பட்டா தரவில்லை என்றால் தீக்குளிப்போம் என்றனர். 
பரபரப்பு
இதை கண்டதும், அங்கிருந்த போலீசார் ஓடிச்சென்று அவர்களை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை பிடுங்கினர்.  பின்னர் அவர்களிடம் தாசில்தார் கூறுகையில், ‘வீட்டுமனை கேட்டு புதிதாக விண்ணப்பம் அளியுங்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். 
வீட்டுமனை பட்டா கேட்டு தாசில்தார் முன்பு தாய் மற்றும் மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story