தாளவாடி அருகே டிரைவர் மீதான தாக்குதலை கண்டித்து பஸ்களை நிறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் போராட்டம்; வாலிபர் கைது
தாளவாடி அருேக டிரைவர் மீதான தாக்குதலை கண்டித்து பஸ்களை நிறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தாளவாடி
தாளவாடி அருேக டிரைவர் மீதான தாக்குதலை கண்டித்து பஸ்களை நிறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அரசு பஸ்
தாளவாடியை அடுத்த பனக்கள்ளி கிராமத்தில் இருந்து பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளை ஏற்றி கொண்டு அரசு பஸ் ஒன்று தாளவாடி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்த பங்காரு (வயது 53) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக புட்டுமாதா என்பவர் இருந்தார்.
நேற்று மாலை 3.30 மணி அளவில் மல்லன்குழி மாதிரி பள்ளியில் இருந்து மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு பஸ் சென்றது. அப்போது பஸ்சுக்கு பின்னால் மோட்டார்சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து உள்ளார்.
டிரைவர் மீது தாக்குதல்
அந்த பஸ்சானது மல்லன்குழி பஸ் நிறுத்தத்தில் நின்றபோது, மோட்டார்சைக்கிளில் வந்த நபர், தன்னுடைய மோட்டார்சைக்கிளுக்கு வழிவிடல்லை என கூறி அரசு பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த நபர் திடீரென அரசு பஸ் டிரைவரின் சட்டையை பிடித்து கீழே இறக்கி சரமாரியாக தாக்கினார். மேலும் அருகில் இருந்த குழியிலும் டிரைவரை தள்ளினார். இதில் டிரைவர் பங்காரு காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று வாலிபரிடம் இருந்து டிரைவரை மீட்டனர். மீட்கப்பட்ட பங்காரு தாளவாடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
போராட்டம்
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று டிரைவரை தாக்கிய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ‘அவர் தமிழ்புரம் பகுதியை சேர்ந்த சிவநாதன் (35),‘ என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிவநாதனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதற்கிைடயே டிரைவரை தாக்கிய சிவநாதனை கைது செய்யக்கோரி தாளவாடி பகுதியில் இயங்கிய அனைத்து அரசு பஸ் டிரைவர்களும் பஸ்களை இயக்காமல் பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
இதனால் பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய கிராமத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதைத்தொடர்ந்து அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தையில் போலீசார் ஈடுபட்டனர். இதையடுத்து டிரைவரை தாக்கிய சிவநாதனை போலீசார் கைது செய்தனர். இதன்காரணமாக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு இரவு 7 மணி அளவில் பஸ்களை இயக்கினர். இந்த சம்பவத்தால் தாளவாடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story