தகராறை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: டிரைவர் அடித்துக்கொலை


தகராறை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: டிரைவர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 14 Dec 2021 5:41 AM IST (Updated: 14 Dec 2021 5:41 AM IST)
t-max-icont-min-icon

பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட கார் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேலையனூர் கிராமம் படவேட்டுஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). கார் டிரைவர். இவருடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த சந்திரசேகர் (27) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி(33) இருவரும் சேலையனூர் நுழைவுவாயில் அருகே மது அருந்தினர். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.

அதன்பிறகு தட்சிணாமூர்த்தி, தனது உறவினர் பிரபாகரன் மற்றும் அவருடைய தம்பி சிவகுமார் ஆகியோருடன் சந்திரசேகர் வீட்டுக்கு சென்று அவரிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.

அடித்துக்கொலை

அப்போது பக்கத்து வீட்டுக்காரரான டிரைவர் சுரேஷ், சந்திரசேகருடன் தகராறு செய்த 3 பேரையும் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த தட்சிணாமூர்த்தி, பிரபாகரன், சிவகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து சுரேசை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி விட்டனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த சுரேஷ், ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதை பார்த்த 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

உடனடியாக சுரேசை அக்கம் பக்கத்தினர் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தட்சிணாமூர்த்தி, பிரபாகரன், சிவகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Next Story