‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சமூக விரோத செயலுக்கு முற்றுப்புள்ளி
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு ஸ்டாலின் சாலையில் பல ஆண்டுகளாக உபயோகமின்றி உள்ள நாய்கள் காப்பக கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து பயன்பாடின்றி உள்ள அந்த கட்டிடத்துக்குள் யாரும் செல்லமுடியாதவாறு இரும்புத்தகடுகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிடத்தை சுற்றி குவிந்திருந்த குப்பைகளும் அகற்றப்பட்டது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
குப்பைகள் உடனடி அகற்றம்
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் 8-வது வார்டு கிருஷ்ணன் கோவில் தெருவில் நகராட்சி உத்தரவை மீறி அங்குள்ள வாடகை வீட்டுதாரர்கள் சிலர் குப்பைகள் கொட்டி வரும் செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதனைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் தேங்கியிருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றியதுடன், இனி அப்பகுதியில் குப்பைகள் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதியினருக்கு எச்சரிக்கை விடுத்து சென்றனர்.
மின்னல் வேகத்தில் மின்வாரியம் நடவடிக்கை
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து ஆபத்தான நிலையில் ஒரு மின்கம்பம் இருப்பது குறித்த செய்தி, ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த மின்கம்பம் உடனடியாக அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் வைக்கப்பட்டிருக்கிறது. மின்னல் வேக நடவடிக்கையை கையாண்ட மின்வாரிய அதிகாரிகளுக்கும், உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’ பத்திரிகைக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பார்வை இழந்த 3-வது கண்
குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு கைது செய்வதற்கு போலீஸ்துறையின் 3-வது கண் என்று அழைக்கப்படும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உறுதுணையாக உள்ளன. ஆனால் பல இடங்களில் இந்த கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக கீழ்ப்பாக்கம்-நியூ ஆவடி சாலை சந்திப்பு, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சிக்னல் உள்பட இடங்களில் தலைகீழாக பார்வையிழந்தது போன்று கண்காணிப்பு கேமராக்கள் தொங்கி கொண்டிருக்கின்றன. பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சி.சி.டி.வி. கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று போலீசாருக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்த வேண்டும்.
-சமூக ஆர்வலர்கள்.
கன்னிமாரா நூலகத்துக்கு குப்பை தொட்டி தேவை
சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்துக்கு தினந்தோறும் பலர் வருகை தருகிறார்கள். ஆனால் இந்த வளாகத்தில் குப்பை தொட்டிகள் இல்லை. இதனால் குப்பைகள், சாப்பிட்ட இலைகள் போன்றவற்றை வளாகத்திலேயே ஒரு ஓரமாக போடவேண்டிய சூழல் நிலவுகிறது. அந்த குப்பைகள் சரிவர அகற்றப்படுவதும் கிடையாது. எனவே தேவையான குப்பை தொட்டிகள் வைப்பதுடன், சேரும் குப்பைகளை அடிக்கடி அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
- மாணவி க.லட்சமி, கோடம்பாக்கம்.
குண்டும், குழியுமான சாலை
சென்னையை அடுத்த கீழ்கட்டளை டாக்டர் ராமமூர்த்தி நகரில் உள்ள சாலை 300 மீட்டர் அளவுக்கு குண்டும், குழியுமாகவும், மேடு-பள்ளமாகவும் மிக மோசமாக இருக்கிறது. இங்கு தனியார் பள்ளியும் அமைந்துள்ளது. எனவே இச்சாலையை சீரமைத்து தரவேண்டும்.
- க.சிவகுமார், கீழ்கட்டளை.
குடிநீர் குழாய்களில் வரும் கழிவுநீர்
சென்னை கொளத்தூர் காந்திநகர் இந்திரா தெருவில் உள்ள அனைத்து குடிநீர் குழாய்களிலும் கழிவுநீர் கலந்து வருகிறது. கடந்த 3 மாதங்களாக இந்த நிலை தான் நிலவுகிறது. இதனால் அப்பகுதிவாசிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் நலனை காக்க வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள், கொளத்தூர்.
நிறுத்தப்பட்ட பஸ் சேவைகள் மீண்டும் இயக்கப்படுமா?
சென்னையில் நிறுத்தப்பட்டுள்ள 12, 29டி, 30, 31, 38 எச் ஆகிய மாநகர பஸ் வழித்தட சேவைகளை மீண்டும் இயக்கினால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள் என அனைவருக்கும் பயன்உள்ளதாக இருக்கும். இந்த கோரிக்கையை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.
- கா.முகமது காசீம், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்.
வாகன ஓட்டிகளை சிரமப்படுத்தும் சாலை
சென்னை பெருங்குடி 184-வது வட்டத்தில் உள்ள அண்ணா நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக தார் சாலை தோண்டப்பட்டது. இப்பணி முடிவடைந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் அந்த சாலையை சீரமைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த சாலை சீரமைக்கப்படுமா?
-ராஜேஷ், பெருங்குடி.
குப்பைகள் அகற்றப்படுமா?
சென்னை முகப்பேர் மேற்கு சுரங்கப்பாதை அருகே சர்வீஸ் சாலையோரப்பகுதி குப்பை குளம் போன்று காட்சி அளிக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் குவிந்துள்ள குப்பைக்கழிவுகளை உடனடியாக அகற்றிட வேண்டும். இனிமேல் இங்கு குப்பைகள் சேராதவாறு உரிய நடவடிக்கைகளை கையாள வேண்டும்.
- லாசர், முகப்பேர் மேற்கு.
நாய்கள் தொல்லை
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவில் மாடுகள் அதிகளவில் உலா வருகின்றன. நாய்கள் தொல்லையும் தாங்க முடியவில்லை. இதனால் சாலையில் அச்சத்துடன் சென்று வரும் நிலை இருக்கிறது.
-புஷ்பலதா, கிழக்கு தாம்பரம்.
Related Tags :
Next Story